முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 15,50,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளின் சோதனைகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்ற நிலையில் இன்று முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது தமது வீட்டில் பணம் மற்றும் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என காமாராஜ் தெரிவித்துள்ளார். எனினும் இன்று காமராஜ் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.15,50,000 பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் அமைச்சர் காமராஜ், கடந்த 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, தமது பெயரிலும், தமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58,44,38,252/ அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக கூறியுள்ளது.
விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு 120(B) IPC, 13(2} r/w 13(1) (e), 109 IPC r/w 13(2) r/w 13(1) (e), 13(2) ±/w 13(1) (b), உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ், காமராஜ் அவரது மகன்கள் இனியன், இன்பன் ஆகியோர் மீதும், R.சந்திரகாசன் B.கிருஷ்ணமூர்த்தி .உதயகுமார் ஆகியோர் மீதும் 07.07.2022ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டதாக செய்தியக் குறிப்பிவ் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் புலன் விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை (6) கோயம்புத்தூர் (1) திருச்சி (3), தஞ்சாவூர் (4) மற்றும் திருவாரூர் (38) மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூ.41,06,000/-, தங்க நகைகள் 963 சவரன், சுமார் 23,960 கிராம் வெள்ளி, i-phone, கணிணி, பென் டிரைவ், Hard Discs மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.15,50,000/- வங்கி பெட்டக சாவி, i-phone, கணிணி, பென் டிரைவ், Hard Discs மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.








