காவிரி விவகாரத்தில் நமக்கான உரிமையை நாம் கேட்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார். நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத்தை சந்திக்கும் அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசுகிறார்.
இதனிடையே சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் கூறியதாவது : “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை ஜூன் மாதம் கர்நாடகா தரவில்லை, இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாட மாநிலத்திற்கு அறிவுறுத்த வேண்டும் . உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீரை வழங்க வேண்டும். நமக்கான உரிமையை நாம் கேட்கிறோம். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சிக்குப் பதில் 2.83 டி.எம்.சி.தான் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை செல்கிறது. கடைமடை விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது” என துரைமுருகன் கூறினார்.






