தானியங்கி காரில் பயணித்த முதியவரின் ரியாக்ஷன் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே கார் பயணம் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கக் கூடியது. ஆனால் டிரைவரே இல்லாத காரில் பயணம் செய்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா. அப்படி டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கிக் காரில் பயணித்த 2 முதியவர்களின் ரியாக்ஷன் தான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த அமென்டா கிளின் என்ற பெண் தனது தாத்தாக்களான கென்னி மற்றும் ஜெர்ரிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்தார். இதுகுறித்து அமெரிக்க கப்பல் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 81 வயதான கென்னி இன்ஸ்டாகிராமில், ‘வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.’ என்று வீடியோவுடன் ஒரு பதிவு போட்டுள்ளார்.
ஜெர்ரி மற்றும் அமென்டாவுடன் ஜாக்குவார் நிறுவனத்தின் தானியங்கி காரில் ஏறும் கென்னி டிரைவர் இல்லாததைப் பார்த்து, ‘இதையெல்லாம் நம்புகிறீர்களா?’ என கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். ஒருவித பயத்துடனே சுற்றி சுற்றி பார்த்தவர், போக்குவரத்தில் நேர்த்தியாக கார் இயங்குவதை கண்டு மிகுந்த ஆச்சர்யப்படுகிறார். “என்னால் இதை நம்ப முடியவில்லை. நம்மைவிட கார் சிறப்பாக இயக்கப்படுகிறது. இந்த அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.” என்று கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-ம.பவித்ரா







