திராவிட மாடல் ஆட்சி என்று திமுகவினர் பெருமிதமாக சொல்லிக் கொண்டிருக்க… திராவிட மாடல் என்றெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி அடுத்த சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்…
பத்தாண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த திமுக 2021ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பதவிப் பிரமாணத்தின் போது ’’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லி’’ நிமிர்ந்து பார்த்த, பார்க்க வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து, புதுமைப் பெண், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். நீட் விலக்கு, ஆன் லைன் ரம்மி தடை உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில், ‘’இது திராவிட மாடல் ஆட்சி’’ என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டத் தொடங்கினார்.
திராவிட மாடல் ஆட்சி விளக்கம்
இது குறித்து முதலமைச்சர் கூறுகையில், ‘’எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க, அனைத்து மாவட்டங்கள், சமூகங்களுக்குமான வளர்ச்சிதான் திராவிட மாடல். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை உள்ளிட்ட எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க கூடாது.
சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய ஐந்தும் முன்னேற்றமடைய வேண்டும். இதுபோன்றதொரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். அண்ணா, மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலத்தில் குறிப்பிடப்படாத திராவிடல் மாடல் என்கிற சொல்லாடலை மு.க.ஸ்டாலின் தற்போது தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.
அதிமுகவை தவிர்க்கும் சொல்லாடல்
இதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள். அதாவது, அதிமுகவும் திராவிடக் கட்சிதான். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக, அதிமுக இருகட்சிகள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகின்றன. குறிப்பாக, ‘’சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழியுரிமை ஆகியவற்றில் திமுகவும் அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி போல’’ என்றார் எம்.ஜிஆர். ஆனால், அவர் உருவாக்கிய அதிமுக இப்ப இல்ல என்பதை சுட்டிக் காட்டும் வகையில், இது திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் சொல்லி வருகிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்று ஒன்றும் இல்லை. அது ஒரு அரசியல் வார்த்தை மட்டுமே. காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்க முயற்சிக்கின்றனர். இது ஒரே நாடு ‘ஒரே ஒரே இந்தியா’ என்பதற்கு எதிரானதாக இருக்கிறது’ என்றெல்லாம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் தொடர் சர்ச்சை
கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆளுநர் மாளிகை, அரசியல் மாளிகையாக மாறிவிட்டது என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
நீட் தேர்வு, இந்தி மொழி உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது ஆளுநர் தெரிவிக்கும் கருத்துகள், அரசியல்ரீதியிலான விமர்சனங்கள் சர்ச்சையாகி வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் இணக்கமற்ற நிலையே நிலவி வருகிறது. ஆளுநர் மீது குடியரசுத் தலைவர் வரை சென்று முறையிட்டுள்ளனர். நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டு எம்.பிக்கள் கவனம் ஈர்த்துள்ளனர்.
அண்மையில் பிரதமரின் தமிழ்நாட்டு வருகை, முதலமைச்சரின் டெல்லி பயணத்திற்கு பின்னர் சற்று தணிந்திருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில், ஆளுநரின் திராவிட மாடல் குறித்து தற்போது தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர், ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும். அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
அனைத்து மாநிலங்களுக்குமான மாடல்
குறிப்பாக, ’’திராவிட மாடல் தான் அனைத்து மாநிலங்களுக்குமான நிர்வாக பார்முலா. திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்கின்றனர். அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.’ என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநர் வேலையைத் தவிர அனைத்து வேலைகளையும் செய்கிறார். ஆளுநராக வரவில்லை. பாஜக தலைவராக வந்துள்ளார்.
கமலாயத்தில் இருக்க வேண்டியவர், ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு அரசியல் செய்கிறார். மொத்தம் 17 மசோதாக்கள் அவரிடம் உள்ளன. அவற்றை நிலுவையில் வைத்திருப்பதற்கும் நிறுத்தி வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய 3 நாட்கள் மொத்தம் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்களை திமுக நடத்துகிறது. இதற்காக கூட்டங்கள் நடைபெறும் பகுதி, பங்கேற்கும் தலைவர்கள், பேச்சாளர்கள் விபரங்களையும் திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
ஆளுநருக்கு கட்சிகள் எதிர்ப்பு
ஆளுநரின் கருத்துக்கு, தேசிய கட்சியாகவும் திமுகவின் கூட்டணிக் கட்சியாகவும் உள்ள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ’’பாஜகவின் கொள்கையை சொல்லும் ஆளுநர், அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டு வருகிறார். அவரது ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை, ‘’ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘’். ஆளுநர் பதவிலிருந்து விலகி விட்டும் அவ்வாறு அவர் பேசட்டும். திராவிட இயக்க கருத்தியலை இழிவுபடுத்தி வரும் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும’ என்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன், தனது ட்விட்டர் பக்கத்தில், ’களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் கோபம் தொடருமா…? இனியும் இணக்கம் பிறக்குமா…? பொறுத்திருந்து பார்க்கலாம்…









