கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்றி குழந்தைகள் உயிரிழந்ததை வெளிக்கொண்டு வந்த மருத்துவர் கஃபீல் கான், ஜவான் படத்தைப் பார்த்துவிட்டு ஷாருக்கானுக்கு கடிதம் எழுதினார்.
அட்லி இயக்கிய ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி வெளியானது.
ரூ.1,000 கோடி வசூலை ’ஜவான்’ படம் கடந்ததாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், கடந்த வார இறுதியில் உலகளவில் ரூ.1043.21 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படம் இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உத்தரப்பிரதேசத்தின் மருத்துவரும் எழுத்தாளருமான கஃபீல் கான் ஜவான் படத்தைப் பார்த்து விட்டு ஷொருக்கானை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
யார் இந்த டாக்டர் கஃபீல் கான்?:
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை வீக்கம் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு 63 பச்சிளம் குழந்தைகள் உள்பட 80 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் அப்போது புதிதாக அமைந்த பாஜக அரசின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற 5 மாதங்களில் நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. யோகி ஆதித்யநாத் சொந்த தொகுதிதான் கோரக்பூர்.
ஆனால், குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததே காரணம் என்று அங்கு பணியாற்றிய குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான் குற்றம்சாட்டினார். அப்போது இதனை மறுதத் பாஜக அரசு, அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவர் கஃபீல் கானை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால், தனது சொந்த பணத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி சில குழந்தைகளின் உயிரை டாக்டர் கஃபீல் கான் காப்பாற்றியதாக தகவல்கள் வெளியாகின. பலிகடா ஆக்கப்பட்ட கஃபீல் கான், சுமார் 9 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
டாக்டர் கஃபீல் கான் நடிகர் ஷாருக்கிற்கு எழுதிய கடிதம்:
முக்கியமான சமூக-அரசியல் பிரச்சினைகளை எழுப்பி சினிமாவில் காட்டியதற்கு நன்றி . திரைப்படத்தில் உண்மையான குற்றவாளிகள் பிடிபட்டு நீதி கிடைத்தாலும், நிஜ வாழ்க்கையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக உலா வருகிறார்கள். எனது வேலையை திரும்பப் பெற நான் போராடுகிறேன் என்றார்.
ஷாருக்கான் மற்றும் படத்தின் இயக்குநர் அட்லியுடன் படக்குழுவை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்றும் டாக்டர் கான் கடிதத்தில் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







