டோமினோஸ் டேட்டாபேஸை ஹேக் செய்து, 10 லட்ச வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சைபர் கிரைம் வல்லுநர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவல்கள் டார்க் வெப்-யில், 4 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
பிரபல பிட்சா விற்பனை செய்யும் நிறுவனமான டோமினோஸின் டேட்டாபேஸ் ஹேக் செய்யப்பட்டது என்றும் 10 லட்ச வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்ட் தகவல்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைப் பேசி எண்கள் திருடப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் நாட்டின் சைபர் கிரைம் இன்டெலிஜென்ஸின் இணை நிறுவனர் அலொன் கால் (Alon Gal) தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை 4 கோடி ரூபாய்க்கு ஒருவரிடம் விற்பனை செய்யப்போவதாக, அந்த ஹேக்கர் டார்க் வெப்-யில் தெரிவித்துள்ளார் என்று அலொன் கால் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுபோன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும் நிறுவனத்தின் விதிமுறைப்படி வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் சேமித்து வைக்கப்படுவதில்லை என்று டேமினோஸ் நிர்வாகம் பதிலளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் டோமினோஸ் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக அதிக சைபர் தாக்குதலை இந்தியா சந்தித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் சைபர் கிரைம் தாக்குதல் கடந்த ஆண்டை விட 300% அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2020ம் ஆண்டு 11,58,208 சைபர் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. அதுவே 2019ம் ஆண்டில் 3,94,499 தாக்குதல் சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளது. இந்த தரவுகளை (Computer Emergency Response Team) வெளியிட்டுள்ளது.
மேலும் கடந்த 12 மாதங்களில் 52 சதவிகித இந்திய நிறுவனங்கள் சைபர் தாக்குதலைச் சந்தித்துள்ளது. இதில் 71% நிறுவனங்கள் அதி தீவிர தாக்குதலைச் சந்தித்துள்ளது. சைபர் தாக்குதலிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு வந்து செயல்பட ஒரு வாரம் காலம் தேவைப்பட்டது என்று 65 % நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளை சொபோஸ் சர்வே (Sophos Survey) அமைப்பு வெளியிட்டுள்ளது.







