இத்தனை ஆண்டுகளில் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் எக்ஸ் பதிவிற்கு விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் விருந்தளிக்கிறார். அதற்காக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், “நான் எப்போதுமே ஒரு பெயரினை மட்டுமே பெருமையாக நினைப்பதுண்டு. நாமெல்லாம் பாரதர்கள். இந்திய என்ற பெயர் ஆங்கிலேயர்கள் கொடுத்தது. நமது பாரதம் எனும் சொந்தப் பெயரினை அடைவதற்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷாவிடம் வேண்டுவதெல்லாம் உலகக் கோப்பை போட்டியில் நமது அணி வீரர்கள் ஜெர்சியில் பாரத் எனக் குறிப்பிட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தப் பதிவினை பகிர்ந்து நடிகர் விஷ்ணு விஷால், “இவ்வளவு நாள் இந்தியா என்ற பெயர் பெருமையை தரவில்லையா?” எனக் கேள்வி கேட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பெயர் மாற்றம் செய்வது குறித்து எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.







