“பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தி.மு.க ஒத்துழைப்பு வழங்கும்” – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்பு டி.ஆர். பாலு பேட்டி!

“பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தி.மு.க ஒத்துழைப்பு வழங்கும்” என அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

“பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்கள். தற்போது இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழகம் தலை வணங்குகிறது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்காக ராணுவத்திற்கு பாராட்டு. இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. பஹல்காமில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏற்புடையது இல்லை என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தி.மு.க ஒத்துழைப்பு வழங்கும்.  உறுதிணையாக நிற்கும் என்று கூட்டத்தில் தெரிவித்தோம். பயங்கரவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம் என அனைவராலும் ஒப்புகொள்ளபட்டது. பாதுகாப்பு குறித்த கூட்டத்திற்கு பிரதமர் வரவில்லை. நாட்டின் பாதுகாப்பு குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் ஏன் பங்கேற்கவில்லை என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பினோம்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டாமல் இருப்பதற்கு நியாயமான காரணம் இருக்கும். Sensitive விவகாரங்களை ஆலோசிக்கப்படும் போது அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு தீவிரவாத செயல்களுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கை எடுக்க முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் குறித்தும், இந்திய தரப்பு உயிரிழப்பு குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. மதம் சார்ந்து பேசக்கூடாது. மத சார்பற்ற நிலையில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மதவாதம் குறித்து பேசிவரும் பா.ஜ.க இந்த பிரச்சனையை மத ரீதியாக அணுகாமல் நியாமான முறையில் அணுக வேண்டும். இந்த சூழலில் போர் பதற்றத்தை தணிக்க தற்போது எந்த சந்தர்ப்பமும் இல்லை. போர் சூழ்நிலை இன்னும் மாறவில்லை. அதற்கான சூழல் இன்னும் எழவில்லை” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.