”அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக காப்பாற்றிக் கொண்டிருக்கிறது” -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளும் கட்சி காப்பாற்றிக்கொண்டிருக்கிறது”  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  சிவகங்கை அரண்மனைவாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட பா.ஜ.க சார்பில் 9 ஆண்டு கால சாதனை விளக்க…

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளும் கட்சி காப்பாற்றிக்கொண்டிருக்கிறது”  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

சிவகங்கை அரண்மனைவாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட பா.ஜ.க
சார்பில் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர்
சத்தியேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது பற்றி பார்த்துவருகிறோம். ஆளும் கட்சி அவரை எப்படி காப்பாற்றிக்கொண்டிருக்கிறது எனவும் பார்த்து வருகிறோம். யாரையும் விடமாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். அதேபோல் மோடியும் யாரையும் விடமாட்டார். தமிழை உலக மொழியாக்கியவர் பிரதமர் மோடி. பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழை வளர்த்துவருபவர் மோடி. மற்றொரு பக்கம் திமுக தமிழை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

150 ஆண்டுகளாகப் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலிருந்துவருகிறோம். தற்சமயம் நமது தொழில்நுட்பத்தைக் கொண்டு நம்முடைய பாரம்பரியத்தில் பாராளுமன்றத்தைக் கட்டி அதில் நம்முடைய சோழ மண்ணனின் செங்கோல் இருக்கவேண்டும் என நினைத்து அதனைச் சபாநாயகரின் இருக்கைக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. எதையுமே செய்யாமல் ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழி உட்பட பலபேர் சிறையிலிருந்தனர். இவர்கள் இன்று நம்முடைய ஆட்சியைக் கையை நீட்டி பேசுகிறார்கள். இங்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும் திட்டத்தில் ஆயிரம், ஐநூறு என கமிசன் கேட்பவர்கள் திமுகவினர் இவர்களை ஆண்டவன் சும்மா விடமாட்டார்.

ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடத்த கூடாது. இந்த ஆட்சி குடும்பத்திற்காக மட்டுமே நடைபெறுகிறது. பி.டி.ஆர் அண்ணன் பேசிய ஆடியோவை வெளியிட்டது நாம்தான். அதில் 30000 ஆயிரம் கோடி சம்பாதித்திருக்கிறார்கள். முதல்வரே முன்னதாக இந்த அமைச்சரை விமர்சித்துவிட்டு இன்று அவரை காந்திமான் என பேசுகிறார். சி.பி.ஐ தமிழகத்திற்குள் வரும் அனுமதியை ரத்து செய்துள்ளோம் என அறிவித்துள்ளது. ஏன் இந்த அறிவிப்பு என்றால் அதற்கு காரணம் அவர் மீது சி.பி.ஐயில் நான் புகார் அளித்துள்ளேன். அதனால் தான் அமைச்சரையே கைது செய்துவிட்டார்கள் அடுத்து நாம் தான் என நினைத்து அதற்காகவே இந்த அறிவிப்பு.

அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவருக்கு 6 மாதம் பிணை கிடையாது. அதனால் தான்
முதல்வரின் குடும்பமே அவரை சென்று சந்தித்து ஊழல் குறித்து வாயைத் திறக்காதே என
கூறிவருகின்றனர். உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி ராஜா ஆகியோர் அவர்களது துறையைக் கவனிப்பதே இல்லை. இது குறித்துப் பேசியதற்காகவே என் மீது வழக்கு. திமுக கட்சியில் உள்ள தலைவர்களின் குழந்தைகள் 3 மொழி 4 மொழி பயில்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகள் 2 மொழி மட்டுமே பயில வேண்டும். ஆனால் இந்தி திணிப்பு என நாடகம் நடத்தி வருகின்றனர் திமுகவினர் மோடியை சர்வாதிகாரி என நீங்கள் பேசிவருகிறீர்கள். ஆமாம் அவர் ஊழலை ஒழிப்பதிலே சர்வாதிகாரிதான்.

இந்த் பொதுக்கூட்டம் என்பது 2024 தேர்தலுக்கான ஆரம்பம். எல்லோரையும்
பகைத்துக்கொண்டு பிரதமர் நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு உங்களின் கரங்களைக் கொடுத்து உயர்த்துங்கள். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.