‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் கார்த்திக். இவர் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ‘திட்டம் இரண்டு’ படத்தினை இயக்கினார். அதன்பின் ஜி.வி. பிரகாஷ், கௌரி கிஷன் நடித்த ‘அடியே’ படத்தை இயக்கினார். அடியே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நட்பதிகாரம் 79, குற்றம் நடந்தது என்ன, சோலாபூரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து, இவர் ஹாட்ஸ்பாட் படத்தை இயக்கினார். இப்படம், சமூகப் பிரச்சினைகள் மற்றும் உறவுகளைப் பற்றி பேசும் நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்டிருந்தது. இப்படத்தில் கலையரசன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம் இவர்களுடன் நடிகைகள் கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை விக்னேஷ் கார்த்திக் இயக்கி வருகிறார். ‘ஹாட்ஸ்பாட் 2’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.







