தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பொதுமக்கள் பரிசலை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள காவிரி ஆற்றை கடந்து செல்ல பரிசல் இயக்கப்படுகிறது. குறிப்பாக தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையை கடப்பதற்கு பரிசல் பயணமே ஒரே வழியாக உள்ளது. ஓட்டனூர்-கோட்டையூர் இடையே ஒரு பரிசல் பயணமும், நாகமரை-பண்ணவாடி இடையே ஒரு பரிசல் பயணமும் என இரு பிரிவுகளாக பயணிக்க வேண்டியுள்ளது.
பல காலங்களாக நபர் ஒன்றுக்கு ரூ.5 கட்டணமும், இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.10 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து கட்டணம் தனி நபருக்கு ரூ.20, இரு வாகனம் ஒன்றுக்கு ரூ.40 கட்டணம் என அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.பள்ளி,கல்லூரி சென்று வர மாணவ,மாணவிகளுக்கு ஒரே போக்குவரத்து வழியாக உள்ள பரிசல் பயணத்தின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பரிசலை காவிரி ஆற்றில் பரிசலை இயக்க விடாமல் கரையில் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என உறுதியளித்தை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.







