திண்டிவனம் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்வு முகாம் ஏற்பாட்டிலேயே குறை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிக்கு எப்போது தீர்வு கிடைக்கும் எனவும் மாற்றுத்திறனாளிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் திண்டிவனம் மற்றும் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்வு முகாம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா தலைமையில், நடைபெற்ற இந்த குறைதீர் கூட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதற்காக அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். முகாம் நடத்த இடத்திற்கு வர சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட எந்த அடிப்படை கட்டமைப்பு இல்லாததால் தரையில் ஊர்ந்து வரும் நிலைக்கு மாற்றுத்திறனாளிகள் தள்ளப்பட்டனர்.
கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், தரையில் இறங்கி கைகளை கொண்டு நகர்ந்து முகாம் பந்தலுக்கு சென்றனர். அதிலும் நுழைவாயிலில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்களை தாண்டி வர மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மிகுந்த சிரமப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை களைவதற்காக நடத்தப்பட்ட முகாமே அவர்களை மேலும் சிரமப்படுத்தும் வகையில் பெரும் குறையுடன் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்படுவது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும் பொது இடங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் இருப்பது இனியாவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.







