பல்கலைக்கழகங்களுக்கு மம்தாவை வேந்தராக்க முடிவு: முக்கிய பிரபலங்கள் எதிர்ப்பு

பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக மாநில முதலமைச்சரே செயல்பட ஏதுவாக மேற்கு வங்க மாநில அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது. மேற்கு வங்கத்தில் சுகாதாரம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, சிறுபான்மையினர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ்…

பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக மாநில முதலமைச்சரே செயல்பட ஏதுவாக மேற்கு வங்க மாநில அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.

மேற்கு வங்கத்தில் சுகாதாரம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, சிறுபான்மையினர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் உள்ள மாநில அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக, கவர்னருக்குப் பதிலாக முதலமைச்சரே இருப்பார் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதற்கு அந்த மாநில திரையுலகத்தைச் சேர்ந்தவர்களில் சிலரும், கலையுலகத்தினர் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நடிகர் கெளசிக் சென், திரைப்பட இயக்குநர்கள் அனிக் தத்தா, ராஜா சென், ஓவியர் சமீர் ஐச் உள்ளிட்ட 40 பிரபலங்கள், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பல்கலைக்கழக வேந்தராக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முதலமைச்சர் மாநில பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக நியமிக்க எடுத்த முடிவு எங்களுக்கு ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியது. கல்வி நிறுவனங்களின் சுயாட்சி மற்றும் சுதந்திரத்தின் கட்டாயம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அத்தகைய முடிவு அதற்கு ஒரு அடியாக இருக்கும்.மேலும் இது ஜனநாயக முறைக்கு எதிரானது.
அந்த பதவிக்கு ஒரு கல்வியாளர் நியமிக்கப்பட்டால், அது நிறுவனங்களை நடத்துவதில் வெளிப்புற தலையீடுகளைத் தடுக்கும்.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, உயர்கல்வி நிறுவனங்களில் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி வாரியங்கள், பள்ளி நிர்வாகக் குழுக்கள், நிர்வாகக் குழுக்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு தற்போதைய ஆட்சியில் இருக்கும் அரசு தனது சொந்த ஆட்களையே நியமித்து வருகிறது.

கல்வி அமைச்சரை தனியார் பல்கலைகழகங்களின் பார்வையாளராக நியமிக்கும் முடிவும், அவர்களின் விவகாரங்களில் தலையிடும் அபாயம் நிறைந்ததாகவே உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தை நான் எதிர்க்கிறேன். அதே போல் ஆளுநர் வேந்தராக வருவதையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று நடிகர் கெளசிக் சென் தெரிவித்தார்.

எதிர்வரும் மழைக் காலக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கு பதிலாக முதலமைச்சர் மாநில பல்கலைக்கழகங்களில் நியமிக்க மசோதா கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பார்வையாளராக ஆளுநர் இருப்பதற்கு பதிலாக மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாஸுவை நியமிப்பதற்கும் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வியாளர் மட்டுமே பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என்பது மேற்கு வங்கத்தில் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.