ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கடந்த வாரம் 75,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா- தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.
கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 20,000 கன அடிக்கு மேல் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 25,000 கனடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 30,000 கனடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையின் சோதனை வெற்றி – பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!
தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 10-வது நாளாக நீடிக்கிறது.








