தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் பழங்குடியினர் நல இயக்குநரகம் சார்பில், தமிழ்நாட்டின் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகங்களின் தனித்துவமான உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication GI) பதிவைப் பெறுவதற்காக, புவிசார் குறியீடு தொடர்பான விண்ணப்பப் பதிவு செய்வதில் அனுபவம் பெற்ற ஆலோசகர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கைகள் (Expression of Interest Eol) வரவேற்கப்படுகின்றன.
முன்மொழியப்பட்ட பணிகளின் அடிப்படையில், கள ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல், புவிசார் குறியீட்டுக்குரிய பகுதியை வரைபடமிடுதல், பொருளுக்கும் அதன் உற்பத்திப் பகுதிக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்களைத் தொகுத்தல் மற்றும் பொருட்களின் விவரக்குறிப்புகள், ஆய்வு அமைப்பு மற்றும் தரநிலைகள் உள்ளிட்ட “Statement of Case” தயாரித்தல் ஆகியவை அடங்கும். மேலும், உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்குதல், அங்கீகரிக்கப்பட்ட பயனாளர்களைப் பதிவு செய்தல், பின்னர் பதிவுச் சான்றிதழ் பெற்றுத் தருதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.
இந்த விருப்பக் கோரிக்கை (Eol), திட்ட மதிப்பீட்டிற்கான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்காக மட்டுமே கோரப்படுகிறது. இதில் பங்கேற்கும் ஆலோசகர்கள் / நிறுவனங்கள் தங்களது நிதி முன்மொழிவில் உரிய செலவின விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். இதில் பங்கேற்க விருப்பமுள்ள ஆலோசகர்கள் / நிறுவனங்கள், தங்களது தகுதி, திறன் மற்றும் அனுபவ விவரங்களுடன் உரிய நிதி மதிப்பீட்டை tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு https://www.tntribalwelfare.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும். விவரங்களுக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: ச.பொன்வைத்தியநாதன் 9489941941 / பொ. சிவக்குமார் 8489458489″. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




