கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் விக்ரம் – அதிகாரப்பூரவ அறிவிப்பு

கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ள உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக…

கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ள உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, கனிஹா, மிர்னாலினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 11 ஆம் தேதி வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொள்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் இன்று காலை அவர் வீடு திரும்பி உள்ளார். லேசான நெஞ்சு வலி காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் நெஞ்சுவலி ஏற்படவில்லை எனவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.

விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ரசிகர்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொள்கிறார் என அறிவித்துள்ளது. நாளை மாலை 7 மணிக்கு வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் கோப்ரா இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது, அதில் விக்ரம் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.