33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

2021ஆம் ஆண்டின் சினிமா நிகழ்வுகள்!

2021 கோலிவுட் முதல் பாலிவுட் வரை சந்தித்த என்ன? சாதித்த என்ன? என்பன உட்பட பல்வேறு நடப்புக்கள் திரைப்படம் போன்று மகிழ்ச்சி, சோகம், துக்கம், கொண்டாட்டம் என அனைத்தும் நிறைந்த ஆண்டாக இந்த ஆண்டு இருந்தது என்றே சொல்லாம்.

1. திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் ஆதிக்கம்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் நவம்பர் மாதம் இறுதியில் தான் திறக்கப்பட்டன. இதனால் தமிழ் சினிமா முடங்கும் நிலைக்கே தள்ளப்பட்டன. இதனையடுத்து, பல புதிய திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. திரையரங்குகள் மூடப்பட்டதன் விளைவாய் ஓடிடி தளங்கள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. எனினும், 2021ம் ஆண்டில் திரையரங்குகள் மீண்டும் புத்துயிர் பெறும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

2.ஸ்டார் நடிகர்களுக்கு காத்திருந்த திரையரங்குகள்

கொரோனா தொற்று குறைந்த நிலையில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் முன்னனி நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் இன்றி திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியானால் மட்டுமே ரசிகர்கள் மீண்டும் திரையரங்கை நோக்கி வருவார்கள் என்ற நிலை உருவானது.

3. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை

நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என நடிகர் விஜய் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தரப்பிலிருந்து முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டன.

4. 2022ல் வெளியாகும் கேஜிஎப்-2 –   7 ஜனவரி 2021

2018ம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியான கே.ஜி.எப், மாபெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. தற்போது பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இப்படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. 2ம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 2021ல் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அடுத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

5.பொங்கலுக்கு வெளியான மாஸ்டருக்கு வரவேற்பு – 13 ஜனவரி 2021

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். 2020 ஏப்ரலில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. நடிகர் விஜய் தரப்பில் 100 சதவீத இருக்கை வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டாலும், கொரொனா பரவல் காரணமாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே மாஸ்டர் வெளியீட்டின்போது அனுமதிக்கப்பட்டது.

6. பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் -14 ஜனவரி 2021

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படமும் பொங்கல் ரேசில் கலந்து கொண்டது. சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பல வருடங்கள் கழித்து நடிகர் சிலம்பரசன் தனது உடல் எடையை இந்த படத்திற்காக குறைத்தது அவரது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

7.வசூல் சாதனை படைத்த மாஸ்டர் திரைப்படம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டி வெளியான மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 245 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப்படைத்தாக தகவல்கள் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 145 கோடி வரை வசூல் செய்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் 2017-ல் வெளியான பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்து தமிழகத்தில் அதிக லாபம் கொடுத்த படம் எனும் புதிய சாதனையை விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படைத்தது.

8.ஓடிடியில் வெளியான ஆர்யாவின் டெடி திரைப்படம்  -12 மார்ச் 2021

வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் 2021 இல் இயக்கிய படம் தான் டெடி. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சயீஷா ஜோடியாக நடித்த முதல் படம் இது. இந்த படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக் ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
அனிமேஷன் கதாப்பாத்திரத்தை வைத்து ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கப்பட்டு ஓடிடியில் வெளியான டெடி குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது.

9.தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் காலமானார் – 14 மார்ச் 2021

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேசிய விருது பெற்ற இயற்கை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன். ஈ, பேராண்மை படங்கள் மூலம் தன்னை தனித்துவமான இயக்குநராக நிறுவியர் ஜனநாதன். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளின் போது திடீர் உடல்நல குறைவால் காலமானார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என திரைப்பிரபலங்கள் பலரும் தெரிவித்தனர்.

10.வசூல் சாதனை படைத்த காட்ஸில்லா வெர்சஸ் காங் திரைப்படம் – 24 மார்ச் 2021

ஹாலிவுட் படமான காட்ஸில்லா வெர்சஸ் காங் திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. கொரோனா அச்சுறுத்தலால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பது குறைந்துவந்த சூழலில் காட்ஸில்லா வெர்சஸ் காங் படம் வெளியான முதல் வாரத்திலேயே சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும் வெளியான முதல் நாளிலேயே 6.40 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. தென்னிந்திய திரைப்படங்கள் செய்யாத இந்த சாதனையை ஹாலிவுட் திரைப்படம் செய்தது.

11.விஜய், அஜித் வாக்குப்பதிவு செய்த புகைப்படங்கள் வைரல் – 06 ஏப்ரல் 2021

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது திருவான்மியூர் வாக்குச் சாவடியில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் முதல் ஆளாக வரிசையில் நின்று வாக்களித்தார். நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்ற நடிகர் விஜய் தனது ஓட்டை பதிவு செய்தார். நடிகர் அஜித் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மாஸ்க் அணிந்து வந்ததும் நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்து வாக்கு செலுத்தியதும் குறியீடுகள் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

12.வசூல் சாதனை படைத்த கர்ணன் திரைப்படம் – 09 ஏப்ரல் 2021

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே திரையரங்கில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்த நிலையில் தான் கர்ணன் திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் ஹிட் அடித்தது. இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை கர்ணன் திரைப்படம் நிகழ்த்தியது.

13.கொரோனா தொற்றால் உயிரிழந்த சினிமா பிரபலங்கள் – 11 ஏப்ரல் 2021

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. தொற்று காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்தனர். இயக்குநர் தாமிரா, இயக்குனர் கேவி ஆனந்த், நடிகர் மாறன், நடிகர் பாண்டு உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதே நேரத்தில் நடிகர் விக்ரம், அர்ஜீன், கமல், சூர்யா, அதர்வா, நடிகை நதியா, ஆண்ட்ரியா போன்றவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டனர்.

14.கொரோனா இரண்டாம் அலை; மீண்டும் மூடப்பட்ட திரையரங்குகள் – 14 ஏப்ரல் 2021

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானதை தொடர்ந்து கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த வருடம் 9 மாதங்களாக மூடப்பட்ட திரையரங்குகள் நவம்பர் மாதம் தான் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதால் திரையரங்கை நம்பி இருந்த பெரும்பாலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

15.நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் – 17 ஏப்ரல் 2021

நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான விவேக், திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விவேக் மரணத்துக்கும், இறப்பதற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அப்போதைய தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். நடிகர் விவேக்கின் திடீர் மரணம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

16.ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா – 26 ஏப்ரல் 2021

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கில் நடைபெற்றது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் க்ளோயி ஸாவோ இயக்கிய நோமேட்லேண்ட் சிறந்த திரைப்படமாகவும், ஸாவோ சிறந்த இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்ற இரண்டாவது பெண் ஸாவோ என்பது குறிப்பிடத்தக்கது.

17.சாதனை படைத்த என்ஜாய் எஞ்சாமி பாடல் – 07 மே 2021

சந்தோஷ் நாரயணன் இசையமைப்பில் தீ, அறீவு ஆகிய இருவரும் பாடி நடித்த என்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் வீடியோ யூடியுபில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அறிவு இந்த பாடலை எழுதியுள்ளார். சுயதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஆரம்பித்த மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்தது. உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள இப்பாடல் யூடியூப்பில் இதுவரை 373 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

18.நடிகர்கள் கொரோனா நிதி வழங்கினர் – 14 மே 2021

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிய நிலையில் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்தது. இதனால் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சமும், நடிகர் அஜித் 25 லட்சமும், நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடியும் வழங்கினர்.

19.தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மோதல்

படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவது தொடர்பாக தயாரிப்பாளர்கள் – திரையரங்க உரிமையாளர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என கடிதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்குகளை ஒதுக்குவோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் டிஜிட்டல் முறையில் திரையிடுவதற்கான விபிஎஃப் கட்டணத்தை கட்ட முடியாது எனவும் 30 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்றெல்லாம் கடிதம் கொடுக்க இயலாது எனவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

20.சர்ச்சைகளை உருவாக்கிய தி பேமிலி மேன் 2 தொடர் – 04 ஜூன் 2021

ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்த தி பேமிலி மேன் 2 வெப் தொடர் கடந்த ஜுன் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த தொடரில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும், விடுதலைப்புலிகள் பற்றியும் தவறான தகவல்கள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழக அரசும், சில அரசியல் கட்சிகளும் இத்தொடருக்கு தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. ஆனால், எதிர்ப்புகளை மீறி இந்த தொடர் வெளியானது. தொடரில் நடித்த சமந்தா தாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் அப்படி நடந்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

21. ஹாலிவுட்டிலும் தடம் பதித்த நடிகர் தனுஷ் – 08 ஜூன் 2021

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஓடிடியில் வெளியான படம் ஜகமே தந்திரம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் அத்ரங்கி ரே படத்தில் தனுஷ் நடித்துள்ளார். அதே போல் கிரே மேன் நாவலை தழுவி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தற்போது தனுஷ் இணைந்துள்ளார். இதனை அவென்ஜர்ஸ் பட இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர்.

22. பீஸ்ட் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது 01 ஜூலை 2021

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் படக்குழு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா திரும்பிய படக்குழு மீண்டும் ஜூன் மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகளை சென்னையில் தொடங்கினர்.

23.பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மரணம்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மரணம் பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1950, 60ம் ஆண்டுகளில் பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நடிகர் திலீப் குமார் 2021 ஜூன் மாதம் மூச்சு திணறல் காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 7ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி .உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

24. வசூல் சாதனை படைத்த ப்ளாக் விடோ திரைப்படம் 09 ஜூலை 2021

சூப்பர் ஹீரோ திரைப்படமான ப்ளாக் விடோ, வெளியான முதல் வாரமே 80 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து தொற்றுக் காலத்தில் வெளியான படங்களில் அதிக வசூல் என்ற புதிய சாதனையைப் படைத்தது. திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியான முதல் மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படம் இதுதான். இந்நிலையில், முதல் மூன்று நாட்களில் அமெரிக்கத் திரையரங்குகள் மூலமாக மட்டும் 80 மில்லியன் டாலர்களையும், மற்ற நாடுகளில் 78 மில்லியன் டாலர்களையும் என மொத்தமாக 158 மில்லியன் டாலர்களை வசூலித்து அசத்தியது.

24. ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு – ரஜினிகாந்த் அறிவிப்பு 12 ஜூலை 2021

ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இனி, ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் எனவும் அவர் கூறினார். ரஜினியின் இந்த அறிவிப்பை அப்படியே ஏற்றுக்கொள்வதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

25.அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் 12 ஜூலை 2021

எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அரசியல் தொடர்பான அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். உடல் நலக்குறைவால் அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்த ரஜினிகாந்த், மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் தமக்கு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு நிரந்தர முடிவை அறிவித்தார்.

26.புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் வடிவேலு 14 ஜூலை 2021

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட்டுவிட்டதால் 4 வருடங்கள் கழித்து மீண்டும் படங்களில் நடிக்க உள்ளதாக வடிவேலு.அறிவித்தார். வடிவேலு நாயகனாக நடிக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய வடிவேலு, எல்லோரும் தம்மை வைகைப்புயல் என்று கூறுவதாகவும், ஆனால், தம் வாழ்க்கையில் ஒரு சூறாவளிப் புயலே அடித்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

27.தென்னிந்திய சினிமாவில் பிசியான பஹத் பாசில் 15 ஜூலை 2021

மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் பஹத் பாசில். அவர் நடிப்பில் உருவான மாலிக் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மகேஷ் நாராயணன் இயக்கி, எடிட் செய்த மாலிக் படத்தை ஆண்டோ ஜோசப் தயாரித்தார். தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகர் அல்லு அர்ஜீனின் புஷ்பா திரைப்படத்தில் வில்லன் கதாப்பத்திரத்திலும் நடித்து ரசிகர்களை பஹத் பாசில் கவர்ந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில்.

28. ஆபாச பட விவகாரம்: ஷில்பா ஷெட்டி கணவர் கைது 20 ஜூலை 2021

ஆபாச படங்களை சில செயலிகள் மூலம் வெளியிட்டதாக புகழ்பெற்ற ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறையினர் மத் என்ற தீவில் உள்ள ஒரு பங்களாவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் மற்றும் ஆண்களைக் கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்த குற்றத்தின் பேரில் 5 பேரைக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

29.பாண்டிராஜுடன் இணைந்த நடிகர் சூர்யா 22 ஜூலை 2021

சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். எதற்கும் துணிந்தவன் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட இயக்குனர் பாண்டிராஜ், எடுத்தவரைக்கும் படம் நல்லா வந்திருக்கு. என குறிப்பிட்டிருந்தார்.

30.ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை 22 ஜூலை 2021

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சென்னையில் 90ம் ஆண்டுகளில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படத்திற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, 8 பேக் உடற்கட்டுடன் தயார்படுத்தினார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

31.விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் 24 ஜூலை 2021

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் அதிவேகமாக சென்ற கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாஷிகாவின் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பல மாத சிகிச்சைகளுக்கு பிறகு தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் குணமடைந்தார்.

32.இணையத்தை கலக்கிய வாத்தியாரே மீம்ஸ் 27 ஜூலை 2021

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவும், பசுபதியும் சைக்கிளில் சொல்லும் காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் இணையத்தை அதிரவைத்தனர். வாத்தியாரே என்ற பெயரில் இணையம் முழுவதும் இந்த மீம்ஸ்கள் வலம் வர தொடங்கின. அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இந்த மீம்ஸ்களை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு படத்திற்கு மேலும் வரவேற்பு அளித்தனர்.

33.சூர்யா தயாரிப்பில் ஓடிடியில் வெளியான 3 படங்கள் – 05 ஆகஸ்ட் 2021

சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் உருவான 3 படங்கள் அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகின. இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி நடித்த உடன்பிறப்பே, தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம், அரிசில் மூர்த்தி இயக்கிய ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆகிய திரைப்படங்கள் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. சாரோவ் சண்முகம் இயக்கிய அருண் விஜய் நடித்துள்ள ஓ மை டாக் விரைவில் வெளியாக உள்ளது.

34.மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம்மேனன் கூட்டணி – 06 ஆகஸ்ட் 2021

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு சிம்பு – கெளதம்மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக, எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ யூடியூபில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

35. 9 இயக்குனர்களால் உருவான நவரசா – 07 ஆகஸ்ட் 2021

9 கதைகளை மையமாக கொண்டு 9 இயக்குநர்கள் இயத்தில் உருவான ஆந்தாலஜி படம் நவரசா. இதில் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், அரவிந்த்சுவாமி, கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன், ரவீந்திரன் பிரசாத், வஸந்த் சாய் ஆகியோர் இயக்குநர்களாகப் பணிபுரிந்தனர். சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், அதர்வா, அஞ்சலி, டெல்லி கணேஷ், அதிதி பாலன், பார்வதி உள்ளிட்ட பலர் இதில் நடித்தனர். நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நவரசா படம் மூலம் சுமார் 12,000 தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

36. 20 ஆண்டுகளுக்கு பின் சூர்யா, பாலா கூட்டணி – 11 ஆகஸ்ட் 2021

நந்தா, பிதாமகன் படங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் பாலா – நடிகர் சூர்யா கூட்டணி இணைவதாக அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. ”என்னை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க, மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்” என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

37.பீஸ்ட் படப்பிடிப்பில் தோனி, விஜய் சந்திப்பு – 21 ஆகஸ்ட் 2021

சென்னையில் நடைபெற்ற பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் சந்தித்து பேசினர். பீஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்ற ஸ்டூடியோ வளாகத்தின் மற்றொரு அரங்கில் தோனி நடித்த விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அதற்காக வருகை தந்த தோனி, நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசினார். இந்த புகைப்படங்களை பதிவிட்ட ரசிகர்கள் தலயும், தளபதியும் சந்தித்து கொண்டதாக ட்ரெண்ட் செய்தனர்.

38.ரோலிங் ஸ்டோன் அட்டைப்பட சர்ச்சை – 22 ஆகஸ்ட் 2021

எஞ்சாய் எஞ்சாமி, நீயே ஒளி பாடல்கள் குறித்து, அமெரிக்காவின் ரோலிங் ஸ்டோன் இசைப் பத்திரிக்கையில் எழுதப்பட்ட கட்டுரையில் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையானது. ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் தீ மற்றும் ஷான் வின்செண்ட் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றன. ஆனால் இரு பாடல்களையும் எழுதி பாடிய அறிவின் புகைப்படம் இடம்பெறவில்லை. சர்ச்சைகளுக்கு பிறகு அடுத்த இதழில் அறிவின் தனி புகைப்படத்தை வெளியிட்டது ரோலிங் ஸ்டோன்.

39.நடிகர் மம்முட்டி, மோகன்லால், திரிஷாவுக்கு கோல்டன் விசா- 23 ஆகஸ்ட் 2021

நடிகர் மம்முட்டி, மோகன்லால், நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது ஐக்கிய அரபு அமீரகம். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கெளரவிக்கும் வகையில், 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates) அரசு தொடங்கியது. இந்நிலையில், நடிகர் மம்முட்டி, மோகன்லால், நடிகை திரிஷா உள்ளிட்டவர்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்தது ஐக்கிய அரபு அமீரகம்.

40.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நடிகை ஜோதிகா – 31 ஆகஸ்ட் 2021

தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பு நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். 36 வயதினிலே, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், உடன்பிறப்பே போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இதனை அவரது கணவர் சூர்யாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பெருமையுடன் பகிர்ந்தார். ஜோதிகா இன்ஸ்டாவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்றார்.

41.உலகம் சுற்ற தயாராகும் நடிகர் அஜித் குமார் – 3 செப்டம்பர் 2021

வலிமை பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் மேற்கொண்டார். பின்னர், டெல்லிக்கு சென்று, பைக்கிலேயே 7 கண்டங்கள், 64 நாடுகளை சுற்றி வந்த மாரல் யாசர்லூ என்கிற சாகச பெண்ணை சந்தித்து பேசினார். அவரிடம் பைக்கில் பயணம் செய்த அனுபவங்களை கேட்டறிந்தார். அவரை போல் அஜித்தும் பைக்கில் உலகம் சுற்ற உள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.

42.நடிகையாக அறிமுகமான இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி- 6 செப்டம்பர் 2021

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தினை, முத்தையா இயக்குகிறார். நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முதல் முறையாக தனது படத்திற்கு யுவன் உடன் கூட்டணி அமைக்கிறார் முத்தையா. விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

43. மற்ற மொழிகளில் பிசியாகும் இயக்குனர் ஷங்கர் – 8 செப்டம்பர் 2021

தமிழ் ஹீரோக்களை வைத்தே இதுவரை படம் எடுத்துக்கொண்டிருந்த ஷங்கர், முதன்முறையாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ரகுமான் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு புனேயில் நிறைவு பெற்றதை தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு இந்தியில் அந்நியன் 2 மற்றும் தமிழில் இந்தியன் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44.தலைவி திரைப்படம் திரையரங்கில் வெளியானது – 10 செப்டம்பர் 2021

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தை ஏ.எல் விஜய் இயக்கியிருந்தார். நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவான இந்த படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை முழுமையாக பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

45.தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் பிசியான விஜய் சேதுபதி – 10 செப்டம்பர் 2021

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கடந்த பொங்கல் தினத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்ததிலிருந்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாகவே உயர்ந்தார் விஜய் சேதுபதி. லாபம், துக்ளக் தர்பார், அனபெல்லா சேதுபதி படங்களை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிறிய கதாபாத்திரம் தொடங்கி கதாநாயகன், வில்லன் என கதை பிடித்திருந்தால் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

46.லயன் படத்தின் கதை இது தான் – 16 செப்டம்பர் 2021

தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி படங்களை இயக்கிய அட்லி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு லயன் என தலைப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஷாருக்கானை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற அட்லியின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. பாலிவுட்டின் முன்னனி நடிகரான ஷாருக்கனை வைத்து முழு நீள ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த திரைப்படம் பிரபல வெப் சீரிஸ் மணி ஹெய்ஸ்ட்டின் தழுவல் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

47.ஸ்க்விட் கேம், மணி ஹெய்ஸ்ட் தொடர்களுக்கு வரவேற்பு – 17 செப்டம்பர் 2021

நெட்ஃபிக்ஸ் தொடரான ஸ்க்விட் கேம் வெளியான சில நாட்களிலேயே உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்தது. இதன் அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் சீசன் 2 உருவாகும் என இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் தெரிவித்தார். வங்கிக் கொள்ளையை கதைக்களமாகக் கொண்ட மணி ஹெய்ஸ்ட் நான்கு சீசன்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் 5-வது சீசன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

48.2022-ல் வெளியாகும் பொன்னியின் செல்வன் திரைப்படம் – 18 செப்டம்பர் 2021

மணிரத்னம் இயக்கும் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றன.
பொன்னியின் செல்வன் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதால் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு 2022ம் ஆண்டு கோடை விடுமுறையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

49.விருதுகளை குவித்த தமிழ் திரைப்படங்கள் – 19 செப்டம்பர் 2021

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் சிறந்த இயக்குநருக்கான விருது அசுரன் படத்திற்காக வெற்றிமாறனுக்கு கிடைத்தது. அதே போல சிறந்த பாடகிக்கான விருது சைந்தவிக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வேல்ராஜுக்கும் கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும், அர்ஜுன் தாஸுக்கு சிறந்த வில்லன் விருதும், ஜார்ஜ் மரியானுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது.

50.வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது – 23 செப்டம்பர் 2021

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த இரண்டாவது படமான வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு மைதானங்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொந்தரவு செய்து வந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. யுவனின் பின்னணி இசையுடன் ‘Power is a state of mind’ என்ற வாசகம் இடம்பெற்ற மோஷன் போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

51.விஜய் 66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் – 26 செப்டம்பர் 2021

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இந்த படத்தை இயக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தளபதி 66 என தற்காலிகப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் 66 படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு நடிகர் விஜய்க்கு சம்பளமாக 100 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

52.வசூல் சாதனை படைத்த நோ டைம் டூ டை திரைப்படம் – 30 செப்டம்பர் 2021

சினிமா சரித்திரத்தில் ஒரு கதாபாத்திரத்தை வைத்து அதிகம் எடுக்கப்பட்ட திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் படமாக தான் இருக்கும். இறுதியாக வெளியான நோ டைம் டூ டை திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25 வது படம்.. முரட்டுத்தனமான ஜேம்ஸ் பாண்டாக ஆக்ஷன் காட்சிகளில் டேனியல் க்ரேக் அசத்தியிருக்கும் இப்படம் உலகம் முழுவதும் 771 மில்லியன் வசூலித்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அதிக வசூல் சாதனை படங்களின் பட்டியலில் நோ டைம் டூ டை திரைப்படம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

53.ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது – 03 அக்டோபர் 2021

சொகுசு கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழப்பை தொடர்ந்து, போதைப் பொருள் பயன்பாடு பாலிவுட்டில் பூதாகரமாக வெடித்த நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியாக கைது செய்யப்பட்டார். 20 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த ஆர்யன் கான் ஜாமினில் விடுதலையானார்.

54.நடிகை சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து- 04 அக்டோபர் 2021

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டனர். சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கியபோது, இது குறித்து இருவருமே கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பல உரையாடல்கள் மற்றும் யோசனைகளுக்கு பிறகு தாமும், சாய்யும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவரும் தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக பதிவிட்டனர்.

55.மைக் டைசனுடன் மோதும் விஜய் தேவரகொண்டா- 08 அக்டோபர் 2021

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமான மைக் டைசன் நடிக்கிறார். கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் லைகர் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தற்காப்புக் கலையை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தில் மைக் டைசனுடன் விஜய் தேவரகொண்ட இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

56.சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி வசூல் சாதனை- 09 அக்டோபர் 2021

சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி வசூல் சாதனை என்ற பெருமை டாக்டர் படத்திற்கு கிடைத்தது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு வெளியான முதல் முன்னனி நடிகரின் படமாக டாக்டர் திரைப்படம் கருதப்பட்டது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன், ப்ரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். நெல்சன் திலீப் குமார் இயக்கிய இந்தப் படத்தின் வெளியீட்டின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டன. இறுதி நேரத்தில் சிவகார்த்திகேயன் உதவியுடன் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

57.ஏ ஆர் ரஹ்மான் கதையில் உருவான 99 சாங்க்ஸ்- 09 அக்டோபர் 2021

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் கதை எழுதி, இசையமைத்த படம் தான் 99 சாங்ஸ். முழுக்க, முழுக்க இசையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட 99 சாங்ஸ் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் முதன் முதலில் கதை எழுதி தயாரித்த படமாக 99 சாங்ஸ் திரைப்படம் அமைந்தது.

58.நெடுமுடிவேணு உடல் நலக்குறைவால் காலமானார் – 11 அக்டோபர் 2021

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நெடுமுடிவேணு உடல் நலக்குறைவால் காலமானார். தமிழில் அந்நியன், பொய் சொல்ல போறோம், இந்தியன் போன்ற ஏராளமான படங்களில் நடித்த நெடுமுடிவேணு இறுதியாக நவரசா இணையத்தொடரில் நடித்திருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நெடுமுடிவேணு மீண்டும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

59.நாய் சேகர் ரிட்டன்ஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது- 12 அக்டோபர் 2021

சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில் நாய்களுடன் வடிவேலு செம்ம கெத்தாக அமர்ந்திருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் என்று தலைப்பிட்டதால் இந்த படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என தலைப்பிடப்பட்டது.

60.விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 பேர் வெற்றி- 14 அக்டோபர் 2021

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தில் கொடி மற்றும் புகைப்படங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 பேர் போட்டியிட்டனர். இதில் 129 பேர் வெற்றிப்பெற்றது இணையம் எங்கும் பெரும் பேசுபொருளானது.

62.இறுதிக்கட்ட பணியில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம்- 16 அக்டோபர் 2021

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கல் 15 திரைப்படம் தான் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரா, ஆரி அர்ஜுனன் மற்றும் ஷிவானி ராஜசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் கொரோனா பிரச்சினை, உதயநிதியின் அரசியல் பணிகள் காரணமாக தாமதமானது. தற்போது மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

63.கேரள மாநில திரைப்பட விருதுகள்- 16 அக்டோபர் 2021

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கேரள அரசால் மலையாள திரையுலகின் சிறந்த நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் இந்த விருதினை, முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார்.இதில் சிறந்த நடிகருக்கான விருதை ஜெய சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அன்னா பென்னும் பெற்றனர். இதேபோல், சிறந்த இயக்குனருக்கான விருதை சித்தார்த் சிவா பெற்றார். பிரபல திரைப்படத்திற்கான விருது அய்யப்பனும் கோஷியும் படத்திற்கு வழங்கப்பட்டது.

64.ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மண்டேலா – 21 அக்டோபர் 2021

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடித்த மண்டேலா திரைப்படம் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்தது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்ட 14 படங்களில் தமிழ் திரைப்படங்களான கூழாங்கல் மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் இடம்பெற்றன. இதில் கூழாங்கள் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

68.தேசிய விருது பெற்ற தனுஷ், விஜய் சேதுபதி – 25 அக்டோபர் 2021

2019ம் ஆண்டுக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இமான், நாக விஷால் ஆகியோர் பெற்றனர். டெல்லியில் 67-வது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அசுரன் படத்துக்காக சிறந்த நடிகர் விருது தனுஷ்க்கும், சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது விஜய் சேதுபதிக்கும் வழங்கப்பட்டது. மேலும் ஒத்த செருப்பு படத்துக்கு சிறந்த இயக்குனர் விருது பார்த்திபனுக்கும், விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது டி.இமானுக்கும் வழங்கப்பட்டன.

69.2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது – 25 அக்டோபர் 2021

கொரோனா ஊரடங்கு காரணமாக 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் ஒரு வருடம் கழித்து 2021ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகராக மனோஜ் பாஜ்பாய், சிறந்த நடிகையாக கங்கனா ரணாவத், சிறந்த இயக்குனருக்கான விருது சஞ்சய் பூரண் சிங் சவுகான்க்கு வழங்கப்பட்டது. சிறந்த படத்திற்கான விருது மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்திற்கும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது மதுக்குட்டி சேவியருக்கும் வழங்கப்பட்டன.

70. தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் நடிகர் ரஜினிகாந்த் – 26 அக்டோபர் 2021

2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் அக்டோபர் 25ம் தேதி டெல்லியில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கி கௌரவித்தார். விருது பெற்ற ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

71.இது பதவி அல்ல, பொறுப்பு – நடிகர் விஜய் அறிவுரை – 27 அக்டோபர் 2021

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரை நடிகர் விஜய் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஜய்.இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து, பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

72. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் – 28 அக்டோபர் 2021

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிறகு தனது குடும்பத்தினருடன் அண்ணாத்த திரைப்படத்தைப் பார்த்ததாக ஹூட் செயலியில் பதிவிட்ட ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். பரிசோதனை முடிந்த பின்னர் ரஜினிகாந்த் மீண்டும் வீடு திரும்பினார்.

73.மாரடைப்பு காரணமாக புனித் ராஜ்குமார் உயிரிழந்தார் – 29 அக்டோபர் 2021

கன்னட சினிமாவின் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக அக்டோபர் 29 ஆம் தேதி பெங்களூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். புனித் குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையிலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

74.அடுத்த ஆண்டு வெளியாகும் விக்ரம் திரைப்படம் – 01 நவம்பர் 2021

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
விக்ரம் படத்தின் டீசர், முதல் கிளான்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் முழு பணிகளையும் நிறைவு செய்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படகுழு திட்டமிட்டுள்ளது.

75.1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்றார் நடிகர் விஷால் – 01 நவம்பர் 2021

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஷால் ஆறுதல் தெரிவித்தார். பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்ற விஷால் அங்கு அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். தனது சொந்த செலவில் புனித் ராஜ்குமார் படிக்க வைத்துக்கொண்டிருந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை தானே ஏற்பதாகவும் நடிகர் விஷால் அறிவித்தார்.

76.ஜெய் பீம் திரைப்படத்திற்கு குவிந்த பாராட்டு – 02 நவம்பர் 2021

த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஜெய் பீம் படத்தை பார்த்து நடிகர் சூர்யாவையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.

77.விஜய் சேதுபதி மீது தாக்குதல்-வைரலான வீடியோ – 03 நவம்பர் 2021

பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. நடிகர் விஜய் சேதுபதிக்கும், நடிகர் மகா காந்திக்கும் விமானத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் மகா காந்தி, விஜய் சேதுபதியை தாக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. வாக்குவாதம் முற்றியதால் கை களப்பு ஏற்பட்டதாகவும் அதனால் விஜய் சேதுபதி தரப்பினர் தம்மை தாக்கியதாக நடிகர் மகா காந்தி வழக்கு தொடர்ந்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியது.

78.ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் திரையரங்கில் வெளியானது- 04 நவம்பர் 2021

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிவா இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் பாடல்களுக்கு ரசிகர்கள் திரையரங்கில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

79.அண்ணாத்த படத்துடன் மோதிய எனிமி திரைப்படம்- 04 நவம்பர் 2021

விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்த எனிமி திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியானது. ஆனந்த் சங்கர் இயக்கியிருந்த எனிமி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் எனிமி திரைப்படம் மட்டுமே அண்ணாத்த படத்துடன் தீபாவளி போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

80.தந்தை கட்சியில் இணைய வேண்டாம் – நடிகர் விஜய் அறிக்கை – 05 நவம்பர் 2021

கடந்த ஆண்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியைப்பதிவு செய்தார்.
தமக்கும், அந்தக் கட்சிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாவோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ரசிகர்கள் தமது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என்றுமு் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார். தமக்கும், விஜய்க்கும் பிரச்னை இருக்கிறது. என்றும், சில நாட்களில் அது சரியாகிவிடும். என்றும் எஸ் ஏ சந்திரசேகர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

81.ஜெய் பீம் படத்திற்கு பாமக எதிர்ப்பு – 10 நவம்பர் 2021

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாக வன்னியர் சங்கங்கள் படத்திற்கு எதிராகவும், நடிகர் சூர்யாவிற்கு எதிராகவும் போர் கொடி உயர்த்தினர். நடிகர் சூர்யாவை தாக்கும் நபருக்கு 1 லட்சம் ரூபாய் தரப்படும் என்று மயிலாடுதுறை பாமக செயலாளர் பழனிசாமி அறிவித்தார். ஜெய் பீம் படம் தொடர்பாக பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிற்கு பல கேள்விகளை முன்வைத்து கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு நடிகர் சூர்யாவும் பதில் அளித்தார்.

82. டான் முதல் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு- 11 நவம்பர் 2021

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்து இப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். அனிருத் பாடிய டான் படத்தின் முதல் பாடலான ஜலபுல ஜங்கு சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

83.நடிகராக அறிமுகமானார் இயக்குனர் செல்வராகவன் – 15 நவம்பர் 2021

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிக்காயிதம் திரைப்படத்தில், இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக அறிமுகமானார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கும் இயக்குநர் செல்வராகவன் முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

84. உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட நடிகர் சிலம்பரசன் – 18 நவம்பர் 2021

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசன் உணர்ச்சிவசப்பட்டு அழுதது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிலம்பரசன், தம்முடைய படங்களுக்கு பிரச்சினை வருவது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டுவிட்டேன். நிறைய பிரச்சினைகள் கொடுக்கிறார்கள். பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

85.இளையராஜாவின் மெட்டுக்கு பாட்டெழுத ரசிகர்களுக்கு வாய்ப்பு – 18 நவம்பர் 2021

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாடல் மெட்டைப் பதிவிட்டு, அந்த மெட்டுக்கேற்ற பாடலை எழுதி அனுப்புமாறு அவர் ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார். ரசிகர்கள் பலரும் தமிழில் பாடல்கள் எழுதி அனுப்பி வைத்த நிலையில் பல்வேறு மொழிகளிலும் பாடலை அனுப்புங்கள் என்று இளையராஜா கேட்டுக்கொண்டார். தேர்வு செய்யப்படும் பாடல் வரிகள் அவரது பாடலில் இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

86.வானவேடிக்கையுடன் பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா – 18 நவம்பர் 2021

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான நயன்தாரா, தனது 37வது பிறந்த நாளை வான வேடிக்கைகளுடன் கொண்டாடினார்.
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா உள்ளிட்ட காத்து வாக்குல ரெண்டு காதல் படகுழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிரமில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

87.நியூயார்க் டைம் சதுக்கத்தில் இளையராஜா புகைப்படம் – 20 நவம்பர் 2021

இசைத்துறையில் தனி முத்திரை பதித்த இளையராஜாவுக்கு, மகுடம் சூட்டும் வகையில், நியூயார்க் டைம் சதுக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு கௌரவுப்படுத்தியது Spotify. தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே, இசைஞானி என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், இளையராஜா. இளையராஜாவின் இசையை போற்றும் வகையில், பிரபல பாடல் ஆப் நிறுவனமான Spotify, இசையின் ராஜா எனும் வாசகத்துடன், இளையராஜாவின் படத்தை நியூயார்க் சதுக்கத்தில் இடம் பெற செய்தது.

88.தடைகளை கடந்து வெளியானது மாநாடு திரைப்படம்- 24 நவம்பர் 2021

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவான திரைப்படம் மாநாடு பல தடைகளை கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியானது.. இதில் சிம்புவுடன், எஸ்.ஜே.சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநாடு திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடைகளை கடந்த வெளியான நிலையில் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

89.தல என அழைக்க வேண்டாம்-அஜித்குமார் வேண்டுகோள் – 01 டிசம்பர் 2021

தம்மை தல என்றோ அல்லது வேறு பெயர்களிலோ அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தீனா படம் தொடங்கி நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் ”தல” என செல்லமாக அழைப்பது வழக்கம். அதனால், தல என்கிற வார்த்தை அஜித்தின் பல படங்களில் வசனமாகவும், பாடலாகவும் இடம்பெற்றது. இந்நிலையில் தம்மை அஜித், அஜித்குமார் அல்லது சுருக்கமாக ஏ.கே என அழைத்தால் போதுமானது எனவும், இனி தம்மை தல அல்லது வேறு எந்த அடைமொழியுடனும் அழைக்க வேண்டாம் எனவும் நடிகர் அஜித், தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

90.நடிகர் விக்ரமுடன் கை கோர்க்கும் இயக்குனர் பா ரஞ்சித்- 03 டிசம்பர் 2021

மகான் படத்திற்கு பிறகு விக்ரமின் 61-வது படத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ஆனால் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது விக்ரம் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்குவது உறுதியாகியுள்ளது.

91.விக்ரமும், துருவ் விக்ரமும் இணைந்து நடித்த மகான் – 03 டிசம்பர் 2021

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மகான் திரைப்படத்தில் விக்ரமும், துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மூலம் லலித் குமார் தயாரிக்கிறார். மகான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தந்தையும், மகனும் ஒன்றாக இணைந்து நடித்தது இதுவே முதல் முறையாகும்.

92.செல்வராகவனை இயக்கும் மோகன் ஜி – 04 டிசம்பர் 2021

திரெளபதி படத்தைத் தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தை இயக்கினார் இயக்குனர் மோகன்.ஜி. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் கவுதம் மேனன் நடித்தார். ருத்ர தாண்டவம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனை வைத்து புதிய படம் ஒன்றை மோகன் ஜி இயக்க உள்ளார். ட்விட்டரில் பதிவிட்ட அவர் தனது அடுத்த படத்தில் நாயகனாக செல்வராகவன் நடிக்கவுள்ளதாகவும் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

93.கொரோனா-கமல்-பிக்பாஸ் சர்ச்சை – 06 டிசம்பர் 2021

அமெரிக்க சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்த நிலையில் உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்ற பிறகு ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என விதி இருக்கும்போது, கமல்ஹாசன் அதை மீறி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

94. ரகசியமாக நடந்த கத்ரினா கைப் – விக்கி கவுசல் திருமணம் – 09 டிசம்பர் 2021

பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் – விக்கி கவுசல் திருமணம் டிசம்பர் 9 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்தது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த கத்ரினா கைப் – விக்கி கவுசல் ஜோடி ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்காக மணமக்கள் தங்கிய சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை 8 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கத்ரீனா விக்கி திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு 80 கோடிக்கு விற்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.

95.ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசை- ராஜமவுலி – 11 டிசம்பர் 2021

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடிப்பில் உருவான படம் ஆர்.ஆர்.ஆர், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஜனவரி 7ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.எஸ் ராஜமவுலி, சென்னை தான் தமக்கு சினிமாவை கற்றுக் கொடுத்தாக தெரிவித்தார். ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசை தான் என்றும், ஆனால் கதை தான் நாயகனை தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

96.பிறந்த நாள் கொண்டாடினார் நடிகர் ரஜினிகாந்த் – 12 டிசம்பர் 2021

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கேக் வெட்டி தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். ரஜினி ரசிகர்களும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் HOOTE ஆப் மூலமாக நன்றி தெரிவித்தார்.

97.சர்ச்சையில் சிக்கிய ஓ சொல்றியா பாடல் – 14 டிசம்பர் 2021

புஷ்பா திரைப்படத்தில் சமந்த நடனமாடிய ஓ சொல்றியா பாடல் சர்ச்சையை உண்டாக்கியது. விவேகா எழுதிய இந்த பாடல் ஆண்களை மிகவும் இழிவாக சித்தரிப்பதாக ஆண்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். ஓ சொல்றியா பாடல் குறித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நடிகர் அல்லு அர்ஜீன், பாடல் வரிகள் உண்மை தானே என்று சிரித்தார்.
அதே நேரத்தில் ஓ சொல்றியா மாமா பாடல் இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாகும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.

98. புஷ்பா திரைப்படம் – ரசிகர்கள் கொண்டாட்டம் – 17 டிசம்பர் 2021

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

99.உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்த படங்கள்

உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் தி பேட்டில் அட் லேக் சங்ஜின் போர் பின்னணியில் எடுக்கப்பட்ட சரித்திரப் படம் 902.40 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதே போல சீன நகைச்சுவை சென்டிமெண்ட் திரைப்படமான ஹாய், மாம் உலக அளவில் 822 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாவது இடம் பெற்றது. நோ டைம் டூ டை ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் உலகளாவிய வசூல் 771.24 மில்லியன் டாலர்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தது.

100.நடிகர் சிம்புக்கு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை- 21 டிசம்பர் 2021

படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ வெற்றிக்குப் பின்பும் அப்படியே இருக்கவேண்டும் என நடிகர் சிலம்பரசனுக்கு, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை கூறினார். மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வசூல் சாதனைப்படைத்ததைப் படகுழுவினர் கேக் வெட்டி சென்னையில் கொண்டாடினர். அதில் பேசிய இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், இது ஒரு உண்மையான வெற்றி. என்றும், இப்படத்தின் வெற்றி நாயகன் இந்த இடத்தில் இல்லாதது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்றும் கூறினார்.

  • தொகுப்பு – தினேஷ் உதய்

 

 

 

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading