‘அப்பா’ செயலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாட்டில் ‘அப்பா’ என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கடலூருக்கு சென்றார். அங்கு அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனுடன், அவர் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நேற்று இரவு நெய்வேலி சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

இதையும் படியுங்கள் : “மார்ச் 8 முதல் மகளிருக்கு மாதம் ரூ.2500” – டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவிப்பு!

இந்த நிலையில், வேப்பூர் அருகே திருப்பெயர் கிராமத்தில் இன்று (பிப்.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தி வருகிறது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக செயலியான ‘அப்பா’ என்ற பெயரில் புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி வருகிறார்.

இவ்விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் விழாவில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.