மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சிதம்பரம் தீட்சிதர்கள் குழு சந்திப்பு!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழு சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கனகசபை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.  சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா…

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழு சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கனகசபை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டத்தை முன்னிட்டு ஜூன் 24 முதல் 27 வரை 4 தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அறிவிப்பு பலகையை அகற்றச்சென்ற இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கும், தீட்சிதர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பலகையை அதிகாரிகள் அகற்றினர்.

இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளரும் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தீட்சிதர்கள் வைத்த பதாகை முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டுள்ளது என்றும், பதாகையை அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல், பதாகையை அதிகாரிகள் அகற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய விசாரணை நடத்தி, அதன் பிறகு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழு சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துள்ளனர். நேற்று (30.06.2023)நடந்துள்ள இந்த சந்திப்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் மூன்று தீட்சிதர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.