இரவின் நிழலை போற்றிப்பாடும் சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பார்த்திபன் முக்கியமானவர். அப்படி அவரது முயற்சியில் வெளியான பல படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு பார்த்திபன் நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு…

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பார்த்திபன் முக்கியமானவர். அப்படி அவரது முயற்சியில் வெளியான பல படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு பார்த்திபன் நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் அப்படி ஒரு முயற்சி தான். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் பார்த்திபன். இரவின் நிழல் என்ற புதிய படத்தை நடித்து, இயக்கியுள்ளார் பார்த்திபன். உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் திரைப்படமாக இரவின் நிழல் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் இவரின் முயற்சிகளுக்கு பெரும் வரவேற்புகள் இருந்தாலும் இன்னொருபுறம் விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

உதாரணத்திற்கு ஹாலிவுட்டில் டாம் ஹேங்கின் ‘Cast Away’ என்று ஒரு படம் இருக்கும். விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த விமானத்தில் இருந்து ஒருவர் மட்டும் தப்பித்துவிடுவார். அருகில் இருக்கும் தீவில் தஞ்சமடையும் அவர், அங்கிருந்து வெளியேற வழியின்றி அதே தீவில் தனியாளாக ஆண்டுக்கணக்கில் ‘சர்வைவ்’ செய்வதுதான் படத்தின் கதைக்கரு. உண்மையில் இந்த படத்தை அந்த ஒரு கதாப்பாத்திரத்தைக் கொண்டு மட்டுமே எடுத்திருக்கலாம். ஆனால் இயக்குநர் அதை விரும்பியிருக்கமாட்டார். தீவில் கதாநாயகனின் ‘சர்வைவலோடு’ படத்தை சுருக்காமல், கதாநாயகன் ‘chuck’ என்பவன் யார், அந்த தீவிலிருந்து தப்பித்த பின்பும் குடும்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவன் சந்திக்கும் சிக்கல்கள் என்ன போன்ற பல எமோஷன்களை கொண்டு அப்படத்தை அழகுபடுத்தியிருப்பார்.

இப்போது ஒத்த செருப்புக்கு வருவோம், ஒரே கேரக்டரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால், உண்மையில் அந்த கதைக்கு ஒரே கேரக்டர் தான் தேவைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒத்த செருப்பில் பல கேரக்டர்கள் வந்த போதிலும், கேமிராவை பார்த்தின் முன்பு மட்டும் வைத்து விட்டு, இது ஒரே கேரக்டரைக்கொண்டு எடுக்கப்பட்ட உலகப்படம் என்று பரப்புரை செய்யப்பட்டது. படத்தில் அத்தனை கேரக்டர்கள் இருந்தும் ஆடியன்ஸ் ஏன் பார்த்திபனை மட்டும் திரையில் பார்க்கும் தண்டணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும், போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இதே குற்றச்சாட்டுகளை முன் வைத்து அப்படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்திருந்தன.

இந்நிலையில், எடுத்துக்கொண்ட முயற்சிகளில் சற்றும் அசராத பார்த்தபன் அடுத்ததாக செய்திருக்கும் சாகசம் தான் இரவின் நிழல்.இப்படத்திற்கு ஆடியன்ஸை தாண்டி சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தை preview காட்சியில் பார்த்த பல பிரபலங்களும் விமர்சகர்களும் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் போற்றிப்பாடிக்கொண்டிருக்கின்றனர்.

93 நிமிடங்களை கொண்டுள்ள இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதால் இடைவேளை விட முடியாது.. எனவே முதல் 30 நிமிடங்களுக்க்கு படத்தின் மேக்கிங்கை குறித்த காட்சிகளை போட்டுவிட்டு இடைவேளை விட்ட பிறகு படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா பிரபலங்களான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்களோட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இப்பட்டத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.