காவிரியில் தண்ணீர் திறந்து விட மறக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்சி முக்கொம்பில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியும் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை வழங்காமல் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் விளைநிலங்கள் பாலைவனமாகும் சூழல் உருவாகியுள்ளது. கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உரிய நீரை உடனடியாக பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழ்நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 113 பக்கங்களை கொண்ட விரிவான மனு ஒன்றை தாக்கல் செய்தது. மேலும், காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக, காவிரி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 22 நாட்களாகத் தொடர் காத்திருப்பு போராட்டம் திருச்சி அண்ணா சாலையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று திருச்சி முக்கொம்பில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்டும் போக்கை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழகத்திற்கு இந்த காலகட்டத்தில் கொடுக்க வேண்டிய தண்ணீரை முறைப்படி வழங்க வேண்டும் . விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.







