இந்தியா என்ற வார்த்தையை எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கான பெயராக பயன்படுத்த தடை கோரி தொடரப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் அக்கூட்டணி கட்சிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்த எதிர்க்கட்சி கூட்டணிக்கு தடை விதிக்கக் கோரி கிரிஷ் உபாத்தியாய என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், அரசியல் கட்சிகள் தங்களது தேவைகளுக்காக இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது என்றும், உலக அரங்கிலும் நாட்டின் மீதான பார்வை மாறும் என்றும், இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படும் என்றும் வாதாடினார். எனவே I.N.D.I.A என்ற பெயரை தங்களது கூட்டணிக்கு பயன்டுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இது குறித்து மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, ஆர்.ஜே.டி, ஜே.டி.யு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





