கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக…

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இதனையடுத்து கஞ்சா வழக்குக்காக மே 7-ம் தேதி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்,  மறுநாள் (மே.8) மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வரும் முன்பே திரும்ப பெறப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி கடந்த திங்களன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.