ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி கிரிஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷரோன் ராஜ் (வயது25). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 11 நாட்களுக்குப் பின்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் அவரது காதலியே குளிர்பானத்தில் விஷம் கலந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. தனக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் காதலர் ஷரோன் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் விஷம் கொடுத்து கொலை செய்ததாக கிரிஷ்மா வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதையடுத்து கிரிஷ்மா மற்றும் அவரது தாய் பிந்து, தாய்மாமன் நிர்மல் குமாரன் நாயர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கிரிஷ்மாவின் தாயாரும், தாய்மாமனுக்கும் ஜாமீன் கிடைத்த நிலையில், கிரிஷ்மா ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

இதையடுத்து கடந்த 17ஆம் தேதி இவ்வழக்கில் 95 சாட்சியங்கள் விசாரித்த பிறகு, கிரிஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல் குமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை விவரங்களை பிறகு அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் குற்றவாளி கிரிஷ்மாவுக்கு தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அவருக்கு 15 ஆண்டுகள் சிறை மற்றும் தூக்கு தண்டனை விதித்ததோடு கொலையை மறைக்க உதவிய கிரிஷ்மாவின் தாய்மாமாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.