இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்கு – ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில்,…

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர் சிகிச்சையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது அந்த மனுவில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. அமைச்சர்கள் நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லா அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது என கூறியிருந்தார்.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த ஆளுநர், அவரை நீக்க வேண்டும் என எங்கு சொல்லியிருக்கிறார் என்றும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினாரா? என கேள்வி எழுப்பியதோடு, அந்த கடிதத்தை தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில் பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் மனுவும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாகவும் முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது  என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.