மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ரோஹித் பி டியோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹித் பி டியோ, விசாரணையின் போது திறந்த நீதிமன்றத்தில் பதவி விலகுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார். பொதுவாக, உயர் நீதிமன்ற நீதிபதி பதவி விலகுவது அல்லது ஓய்வு பெறுவதில் பல சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படும். ஏனென்றால் அந்த மாதிரியான சமயங்களில் அவர்களுக்கு என்று விழா ஏற்பாடு செய்யப்பட்டு, மிகுந்த மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்படுவர்.
இந்த நிலையில், திறந்த நீதிமன்ற அறையில் அனைத்து வழக்கறிஞர்களும் இருக்கும் போது, நீதிபதி ஒருவர் தனது ராஜினாமாவை அறிவித்தது இதுவே முதல் முறையாகும். உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் பணிபுரியும் ரோஹித் பி டியோ, தனது ராஜினாமா செய்தியை அறிவித்துவிட்டு, அங்கிருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். உங்களை என் குடும்பமாக நினைத்துதான் உரிமையோடு பலமுறை கடிந்துகொண்டிருக்கிறேன். என்னால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக எனது வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். எனது சுயமரியாதைக்கு எதிராக தன்னால் செயல்பட முடியாது.. அதனாலேயே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார். அப்போது ராஜினாமா செய்தது தொடர்பாக வேறு எந்த விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை.
மாவோயிஸ்ட் தொடர்புகள் தொடர்பான வழக்கில் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபாவை கடந்த 2022 ஆண்டு பி தேவ் விடுதலை செய்தார். இதையடுத்து, இந்த உத்தரவிற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றமும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வுக்கு உத்தரவிட்டது.
நீதிபதி ரோஹித் பி டியோ 2017 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார். நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தார். உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்துள்ளார். பி தேவ் டிசம்பர் 4, 2025 அன்று ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவர் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
சமீபத்தில், நீதிபதி ரோஹித் பி டியோ தலைமையிலான பெஞ்ச், சம்ரிதி எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை ரத்து செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு தீர்மானத்திற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா








