கேன்ஸ் திரைப்பட விழா 2023-ல் இயக்குநர் அனுராக் காஷ்யபின் ‘கென்னடி’ திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில், அவர் இயக்குனர் விக்ரமாதித்யா மோட்வானுடன் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்துகொண்டார்.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்படுகின்றன. இந்த முறை இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படுகின்றன. அதன்படி அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’ படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும், மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘இஷானோ’ படம் பிரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படுகின்றன. அந்த வகையில், மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் இயக்குநர் அனுராக் காஷ்யபின் ‘கென்னடி’ திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. ‘கென்னடி’ திரைப்படம் தேர்வாகியிருப்பதை கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழா 2023ல் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ராபர்ட் டி நீரோ நடித்த பழம்பெரும் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் திரைப்படத்தின் முதல் காட்சியில் அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்ய மோட்வானே கலந்து கொண்டனர்.
திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் 2023 ஆம் ஆண்டு புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கென்னடி திரைப்படத்தின் முதல் காட்சிக்காக தற்போது பிரான்சில் இருக்கிறார். இந்நிலையில் நேற்று , அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்ரமாதித்ய மோட்வானுடன் சிவப்பு கம்பள வரவேற்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் “Wo aa gya!!! WO AA GAYA Mer film ke liye WO AA GAYA,” என்று அவர் தனக்கே உரிய ஸ்டைலில் நானும் வந்தேன், என் படத்திற்காக அவரும் வந்தார் என்ற பொருள்படும்படியான தலைப்பிட்டு அந்த போட்டோவை பகிர்ந்திருந்தார்.
குறிப்பாக லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ராபர்ட் டி நீரோ நடித்த புகழ்பெற்ற இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் ‘திரைப்படத்தின் முதல் காட்சியில் இருவரும் கலந்து கொண்ட போதுதான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்படித்தக்க ஒன்று.
- பி.ஜேம்ஸ் லிசா









