தில்ஜித் தோசன்ஜைக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த கனடா பிரதமர்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  இந்திய பாடகரும், நடிகருமான தில்ஜித் தோசன்ஜை திடீரென சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.  கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங்…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  இந்திய பாடகரும், நடிகருமான தில்ஜித் தோசன்ஜை திடீரென சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.  இந்த விவகாரத்தில் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்தாண்டு சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.  அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது.  இதற்கிடையே இந்தியர்களான ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) அமந்தீப் சிங் (22) ஆகிய நால்வரை கனடா போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்திய அரசுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய பாடகரும், நடிகருமான தில்ஜித் தோசன்ஜை கனடா நாட்டின் பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ நேற்று சந்தித்துள்ளார்.  கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டவுன்டவுன் டொராண்டோ மைதானத்தில் தில்ஜித் தோசன்ஜின் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த சந்திப்பு நடத்தது.  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அன்பின் வெளிப்பாடாக தில்ஜித் தோசன்ஜை கட்டியணைத்தார்.  பின்னர் அங்கிருந்த அனைவரிடமும் கைக்குலுக்கினார்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், “தில்ஜித் டோசன்ஜுக்கு அவரது நிகழ்ச்சிக்கு முன் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்க ரோஜர்ஸ் சென்டரால் நிறுத்தப்பட்டது.  கனடா ஒரு சிறந்த நாடு – பஞ்சாபைச் சேர்ந்த ஒரு பையன் வரலாற்றைப் படைக்கவும், மைதானங்களை விற்கவும் முடியும். பன்முகத்தன்மை நமது பலம் மட்டுமல்ல. இது ஒரு சூப்பர் பவர்” என்று பதிவிட்டுள்ளார்.

தில்ஜித் தோசன்ஜ் இந்திய பாடகர், நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.  இவர் பஞ்சாபி மற்றும் இந்தி சினிமாவில் பணியாற்றியுள்ளார்.  மேலும் இவர் இந்திய இசைத்துறையில் முன்னணி கலைஞர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர்.  ஜாட் & ஜூலியட், ஜாட் & ஜூலியட் 2, பஞ்சாப் 1984, சர்தார் ஜி, அம்பர்சரியா, சர்தார் ஜி 2, சூப்பர் சிங், சஜ்ஜன் சிங் ரங்ரூட் மற்றும் ஷதா உள்ளிட்ட பல பஞ்சாபி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.