இந்திய அரசு, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு ‘காலர் ஐடி’ (Caller ID) வசதியை வழங்குவதை நவம்பர் 1 முதல் கட்டாயமாக்கியுள்ளது. இனி வரும் காலங்களில், உங்களுக்கு அழைப்பு வரும்போது, அழைப்பவரின் தொலைபேசி எண் மற்றும் பெயர் உங்கள் திரையில் தானாகவே தோன்றும்.
இந்திய அரசு ‘காலர் ஐடி’ முறையைக் கட்டாயமாக்கியுள்ளதால், இனி தொலைபேசிக்கு வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பதை எளிதாக அறியலாம். தொலைத்தொடர்புத் துறை (DoT), தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு (TSPs) காலிங் நேம் பிரசன்டேஷன் ‘Calling Name Presentation’ (CNAP) வசதியை அறிமுகப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. CNAP என்பது அழைப்பவரின் எண் மற்றும் பெயரைத் திரையில் காட்டும், சரிபார்க்கப்பட்ட ஒரு அடையாள முறையாகும்.
தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவுப்படி, 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் CNAP வசதி இயல்பாகவே (default) செயல்படுத்தப்படும். உங்களுக்கு அழைப்பு வரும்போது, அழைப்பவரின் பெயர் மற்றும் எண் திரையில் காட்டப்படும். 2G மற்றும் 3G நெட்வொர்க்குகள் மற்றும் பொது தொலைபேசி இணைப்புகளில் (PSTN) இந்த வசதியைச் செயல்படுத்துவது குறித்து தனியாகப் பரிசீலிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, அழைப்பு வரும்போது, திரையின் முதல் பகுதியில் அழைப்பவரின் எண் காட்டப்படும். இரண்டாவது பகுதியில், பெறுநரின் தொடர்புப் பட்டியலில் (contacts) அந்த எண்ணிற்குச் சேமிக்கப்பட்டுள்ள பெயர் காட்டப்படும். ஒருவேளை அந்த எண் சேமிக்கப்படவில்லை என்றால், உள்நாட்டு அழைப்புகளுக்கு, அழைப்பவர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தரவுத்தளத்தில் உள்ள பெயர் திரையில் தோன்றும். சர்வதேச அழைப்புகளாக இருந்தால், திரையில் “சர்வதேச அழைப்பு” (International Call) என்று குறிப்பிடப்படவேண்டும்.




