#Delhi-ல் கட்டடம் இடிந்து விபத்து – சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு!

டெல்லியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் நான்கு மாடி கட்டடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஜேசிபி உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : #Chennai உள்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இந்த விபத்தில் 7 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரபப்பான சூழல் நிலவி வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.