டெல்லி அரசு பள்ளிகளில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்களின் குழந்தைகள் சேராதது ஏன்?- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக கேள்வி

டெல்லி அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகிறது என்றால், அந்த பள்ளிகளில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்காதது ஏன் என பாஜக மூத்த தவைரும் மத்திய அமைச்சருமான பிரகலாத்ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார்.  இலவச…

டெல்லி அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகிறது என்றால், அந்த பள்ளிகளில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்காதது ஏன் என பாஜக மூத்த தவைரும் மத்திய அமைச்சருமான பிரகலாத்ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார். 

இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் காட்டமான விமர்சனத்தை வெளியிட்டார். கோடீஸ்வரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு ஏழைகள் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக விமர்சித்தார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷி, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர் என்று சாடினார். பல மாநில தேர்தல்களில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்,  தாங்கள் ஆளும் மாநிலமான டெல்லியில் அதனை நிறைவேற்றினாரா என கேள்வி எழுப்பினார்.

டெல்லி அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவிப்பதை சுட்டிக்காட்டிய பிரகலாத் ஜோஷி, அவ்வாறு சிறப்பாக டெல்லி அரசு பள்ளிகள் செயல்படுகிறது என்றால், அங்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்காதது ஏன் என்றும் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.