இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்டில், புதிய உலக சாதனையை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போடி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்தது. இதே போன்று ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 12 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு ஆஷஸ் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியபோது பென் ஸ்டோக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நேற்றைய போட்டியில் அவர் அடித்த சிக்ஸர் இந்த உலக சாதனையை படைக்க உதவியது. இந்த ஆஷஸ் தொடர் முழுவதும் அவர் மொத்தமாக 15 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
ஒரு ஆஷஸ் தொடரில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2005ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் ஆஷஸ் தொடரில் 14 சிக்ஸர்கள் அடித்திருந்ததே தனி ஒருவரால் ஆஷஸ் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. தற்போது அவரது இந்த சாதனையை பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.







