இந்தியாவிலேயே முதல் முதலாக ‘இந்து தர்மத்தை’ பாட திட்டமாக சேர்த்துள்ளது பனாரஸ் பல்கலைக்கழகம்.
இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். கடந்த 18ஆம் தேதியன்று இந்த பல்கலைக்கழகத்தில் ‘இந்து தர்மம்’ வழக்கமான பாடத்திட்டமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதல் முறையாக இந்து தர்மத்தை வழக்கமான பாடத் திட்டமாக அறிமுகப்படுத்தும் முதல் பல்கலைக்கழகம் இதுவாகும். முதுகலைப் பட்டமான இந்த பாடம் 4 செமஸ்டர், 16 தேர்வுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பாடத்தில் 1 வெளிநாட்டவர் உட்பட 45 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தகவலளித்துள்ளது. மேலும், இந்தியாவின் புதிய கல்வி திட்டத்திற்கு உட்பட்டு இந்த பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரி வி.கே.சுக்லா தெரிவித்துள்ளார்.
https://twitter.com/bhupro/status/1483464477924552711
முதல் வாரத்தில் இந்துத்துவம் மற்றும் பிராமணியம், இந்து தர்மத்தின் பரிணாமம், அதன் ஆய்வுகள், இந்து மதத்தின் தொன்மை மற்றும் சொல்லின் பொருள், இந்திய அறிவியலியல், வெளிநாட்டு வம்சாவளி இந்து போன்ற பாடங்கள் நடத்தப்படும் என அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சனாதன வாழ்க்கை பாடங்கள் கற்பிக்கும் வகையில் இந்த பாடம் அமையும் என பேராசிரியர் ராகேஷ் உபாத்தியாயா தெரிவித்திருக்கிறார். இந்த பல்கலைக்கழகமானது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (2021) பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.







