சென்னையில் இருந்து விமானம் மூலம் பாங்காங்கிற்கு கடத்த முயன்ற ரூ. 2.33 கோடி மதிப்பிலான வைரங்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் பாங்காங்கிற்கு வைரங்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து
சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காங் செல்லும் பயணிகளின் உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில் பயணி ஒருவரது பையில் ரூ. 2,33,08,595 மதிப்பிலான 1003.99 கேரட் வைரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வைரங்களை கடத்தி சென்ற நபர் யார் என்ற விவரங்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். இதுகுறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.







