இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை மகளிர் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா. 149 புள்ளிகள் பெற்று தென் கொரிய வீராங்கனையை பின்தள்ளி அவர் தங்கம் வென்றார்.
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்தியா மொத்தமாக 97 பதக்கங்களை வென்றுள்ளது. ஜோதி சுரேகா, நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மட்டும் 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வெல்வதற்கான தனிநபர் போட்டியில் தொடர்ச்சியாக 4 முறை 30 செட் புள்ளிகளை அவர் பெற்றிருந்தார். இதே பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் அதிதி. இதன் மூலம் இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைக்க உள்ள தருணத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.




