ஆசிய விளையாட்டு போட்டி: 400 மீ தடை ஓட்டத்தில் வெண்கலம் – வித்யா ராம்ராஜ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

ஆசிய விளையாட்டில் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை பி.டி. உஷா அவர்கள் 1984-ஆம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும்.

அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.

தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.