கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த தமிழ்நாடு வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கல்வான் பள்ளத்தாக்கில் 2020ம் ஆண்டு இந்திய, சீன வீரர்களுக்கு இடையே மோதல் நிலவி வந்தது. அப்போது இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே அவ்வப்போது சண்டை நடைபெற்று வந்த வண்ணம் இருந்தது. இதில், ஜூன் 15ம் தேதி நடைபெற்ற சண்டையில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனியும் ஒருவர்.
போர்க்களத்தில் துடிப்புடன் செயல்படும் வீரர்களுக்கு சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா விருது வழங்கப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக, கடந்தாண்டு மற்றும் இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று தொடங்கியது. நேற்றைய விழாவில் 2019ஆம் ஆண்டு வீர தீர செயல்புரிந்த ராணுவ வீரர்களுக்கும், போரின்போது வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சண்டையில் வீர மரணமடைந்த ஹவில்தார் பழனிக்கு வீர சக்ரா விருது வழங்கப்பட்டது. அதை அவரது மனைவி வானதி தேவிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி தேவி, தனது கணவரின் தியாகத்திற்கு கிடைத்த விருது தன்னை மட்டுமல்ல தனது குடும்பத்தை பெருமைப்படுத்துவதாக கூறினார்.








