அரிட்டாபட்டி பயணம்… ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

அரிட்டாபட்டி மக்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்லவுள்ளதால், ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மதுரை மக்கள் மட்டுமின்றி தமிழ்நாடு விவசாயிகள் அனைவரும் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 3 மாதகால மதுரை மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நாளை அரிட்டாபட்டியில் நடைபெறவுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரிட்டாபட்டி செல்லவுள்ளார்.

நாளை காலை சென்னையில் குடியரசு தின நிகழ்வுகளை முடித்துக்கொண்டு விமானம் மூலமாக மதுரை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக அரிட்டாபட்டி சென்று, இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிட்டாப்பட்டி பயணம் காரணமாக நாளை ஆளுநரால் வழங்கப்படும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்கமாட்டர் என தகவல் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.