மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த காவலருக்கும், பேருந்து நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.
அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணிக்கும் காவல் துறையினர் டிக்கெட் எடுக்க
வேண்டும் என்றும், பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும்
காவல் துறையினர் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மணலியில் இருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் சென்னை மாநகரப்
பேருந்தில் சாதாரண உடையில் ஏறிய காவலர் ஒருவரை பேருந்து நடத்துநர் பயணச் சீட்டு எடுக்கும்படி கேட்டுள்ளார். நான் போலீஸ் எடுக்க வேண்டியதில்லை என கூறியதால் பேருந்து நடத்துநருக்கும், காவலருக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
டிஜிபி தான் வாரண்ட் இல்லாமல் செல்லும் காவலர்களை டிக்கெட் எடுக்கச் சொல்லி
உள்ளார் என்றும், சீருடையில் நீங்கள் இல்லை எனவே டிக்கெட் எடுக்கும்படியும் பேருந்து ஓட்டுநர் காவலரிடம் தெரிவிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக காவல் துறை உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
-ம.பவித்ரா








