தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதில் தமிழகத்தை பொறுத்தவரை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்பவரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க உள்ளார்.விருது பெற உள்ள ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு வெள்ளி பதக்கமும், 50 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நாளில் நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




