சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு இன்று காலை கூடுகிறது.
அமமுக துணைத் தலைவர் அன்பழகன் தலைமையிலும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையிலும் நடைபெறும் கூட்டத்தில் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழுவில் மொத்தமாக 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
அமமுகவை தொடங்கி சிறப்பாக வழிநடத்திவரும் டிடிவி தினகரனுக்கு பாராட்டு, அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழகத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை உள்ளிட்ட திமுக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கு அமமுக சார்பில் அழைப்பு விடுக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.
நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு, மேகதாது விவகாரம், நதிநீர் பிரச்னைகள் குறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் தீர்மானங்களும் நிறைவேற்ற திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








