இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக்கூட்டம்

இலங்கை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக வரும் செவ்வாய்க் கிழமை  அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. காலை 11 மணிக்கு மக்களவை…

இலங்கை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக வரும் செவ்வாய்க் கிழமை  அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. காலை 11 மணிக்கு மக்களவை மற்றும், மாநிலங்களவை கூடுகிறது. ஆகஸ்ட் 13ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரில், 24 புதிய மசோதாக்கள் உள்பட 29 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு,  மாநிலங்களவை அதிமுக எம்.பி தம்பித்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி விவகாரத்தில் இந்தியா தலையிட்டு அங்குள்ள தமிழர்களுக்கு உதவ வேண்டும் என திமுகவும், அதிமுகவும் கூட்டத்தில் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி,  இலங்கை விவகாரம் குறித்து வரும் செவ்வாய்க்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இலங்கை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிவார்கள் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.