அகில இந்திய அளவிலே கொள்கை கூட்டணி! மாநில அளவிலே தேர்தல் கூட்டணி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அகில இந்திய அளவிலே கொள்கை கூட்டணியாகவும், மாநில அளவிலே தேர்தல் கூட்டணியாகவும் அமையக்கூடிய சூழலை பெங்களூரூ கூட்டம் உருவாக்கியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக …

அகில இந்திய அளவிலே கொள்கை கூட்டணியாகவும், மாநில அளவிலே தேர்தல் கூட்டணியாகவும் அமையக்கூடிய சூழலை பெங்களூரூ கூட்டம் உருவாக்கியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 24ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  இரண்டாவது ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூரூவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 26 எதிர் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

ஒற்றை தலைமை, அதிகார குவியல், எதேச்சதிகாரம் ஆகியவற்றில் சிக்கி இந்த நாடு இன்று சிதைவுற்றுள்ளது. இதனால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறது. இதன் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்ற போது 16 கட்சிகள் கலந்துகொண்டன.

நேற்றும் இன்றும் பெங்களூரூவில் நடந்த கூட்டத்தில் 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு பேசியுள்ளனர். தமிழ்நாட்டில் எப்படி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதோ அதேபோல் நாடு முழுவதும் கூட்டணி அமைத்து வெற்றி பெற முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவிலே கொள்கை கூட்டணியாக, மாநில அளவிலே தேர்தல் கூட்டணியாக அமையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

பாட்னா மற்றும் பெங்களூரு கூட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. எனக்கு மட்டும் அல்லாது நாட்டிற்கே மகிழ்ச்சி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடத்த முடிவெடுத்துள்ளோம். அந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசப்படும். 2024-ஐ பொறுத்தவரை ஒரு புதிய இந்தியா உருவாகும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த தேர்தல் சூழலை பொறுத்து ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தேன். ஆனால் இன்றைய அரசியல் சூழலில் யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதே பிரதான கொள்கையாக உள்ளது. அடுத்தடுத்த அமலாக்கத்துறை சோதனைகள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான், இன்னும் கொடுமைகள் நடந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம், அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.

கூட்டணி கட்சிகளின் ஊழல் வழக்கு அமலாக்கத்துறையின் கண்ணுக்கு தெறியவில்லை. இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பாஜகவால் குற்றம் சுமத்தப்பட்டவர்களைதான் அரவணைத்து உட்காரவைத்துள்ளனர். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

இதனை அடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பெங்களூரூ எதிர்கட்சிகள் கூட்டம் குறித்து பதிவொன்றை வெளியிட்டார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

பெங்களூரூவில் மதச்சார்பற்ற, ஜனநாயக தலைவர்களுடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு நடந்தது. பிரிவினைவாத அரசியலின் பிடியில் இருந்து நமது தேசத்தின் பன்மைத்துவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் INDIA என்கிற இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தேசியவாதத்தின் முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எதேச்ச அதிகாரவாதிகள் இறுதியில் வீழ்வார்கள் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது!

ஒற்றுமையே நமது பலம், INDIA கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.