எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்?- அகிலேஷ் யாதவ் பரிந்துரைக்கும் 3 பெயர்கள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக களம் இறக்குவதற்கு மூன்று பெயர்களை உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் பரிந்துரைத்துள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான…

வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக களம் இறக்குவதற்கு மூன்று பெயர்களை உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் பரிந்துரைத்துள்ளார்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வலுவான அணியை உருவாக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக களம் இறக்க காங்கிரஸ் கட்சியினர் ஆர்வம் கொண்டுள்ளனர்.

அதே நேரம் பிற எதிர்க்கட்சிகளில் மூத்த தலைவர்கள் சிலரும் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க விருப்பம் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்போது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் சிக்கல் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்கிற உத்தேச பட்டியலில் உள்ளவர்களில் ஒருவராக கருதப்படும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்,  பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச அரசியலிலேயே தாம் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.

அதே நேரம் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக களம் இறக்க 3 பெயர்களை அகிலேஷ் யாதவ் பரிந்துரைத்துள்ளார். மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகராவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் யாதவ் ஆகிய 3 தலைவர்களில் ஒருவரை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக களம் இறக்கலாம் என அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.