அஜித்குமார் வழக்கு – வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

திருப்புவனம் காவலாளி அஜித்குமாரை வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த கோயிலுக்கு சென்ற பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர் விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தாகவும், அவரின் கண், வாய் உள்ளிட்ட இடங்களில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தப்பட்டதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதற்கிடையில், இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் என்பவர் நேற்று முன்தினம் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்தார். அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கோரி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதினார்.

அதில், “ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், ஏற்கனவே தன்னை மிரட்டினார்கள். இதனால் தனக்கும், தன்னை சார்ந்தோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.