அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் எழுதியது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பதிலளித்துள்ளார்.
மாநிலத்திற்குள் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் சென்று கூலி வேலை செய்யும்
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒரு முன் மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயருக்கு அழைப்பிதழ் அனுப்பியது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பதவிகளில் யாரும் இல்லை என்று கூறி, அக்கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பிஅனுப்பியது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு கடிதம் எழுதியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. “இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே கடிதம் அனுப்பப்பட்டது” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.







