அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து பொன்னையன் மாற்றம்

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக  பொறுப்பேற்ற பின் தனக்குள்ள நியமன அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு நியமனங்களை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னையன் மாற்றப்பட்டுள்ளார். கடந்த 11ந்தேதி…

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக  பொறுப்பேற்ற பின் தனக்குள்ள நியமன அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு நியமனங்களை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னையன் மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருக்காக்கப்பட்டது. அடுத்த 4 மாதங்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுவரை இடைக்கால பொதுச் செயலாளராக செயல்படுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள் அனைத்தையும் இடைக்காலச் பொதுச் செயலாளரும் பெற்றுள்ளார்.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்டோரை நியமிக்கும்  அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளள நிலையில், அதனைப் பயன்படுத்தி கட்சியின் பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொதுக் குழு கூட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இதையடுத்து இன்றும் பல்வேறு முக்கியப்பொறுப்புக்களுக்கான நியமனங்களை அதிமுக இடைக்காலப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மேற்கொண்டுள்ளார். அதன்படி 2 துணைப் பொதுச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு அதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளர் ஆவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வகித்த தலைமை நிலையச் செயலாளர் பதவி தற்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த பதவியை அதிமுக அவைத் தலைராக தற்போது இருக்கும் தமிழ்மகன் உசேன் வகித்து வந்தார்.  எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் வகித்து வந்த பதவியில் மாற்றம் வந்திருப்பது பேசு பொருளாகியுள்ளது. ஆடியோவில் பேசியிருப்பது தான் அல்ல என்று பொன்னையன் மறுத்தபோதிலும் இந்த மாற்றம் பேசுபொருளாகியுள்ளது.

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக 11 பேரை நியமித்தும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், ஆகியோரும்,  சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் தனபால், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட அதிமுக செயலாளர் நா.பாலகங்கா, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.