முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: பலத்தை நிரூபித்த எடப்பாடி பழனிசாமி

நாளை நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக  அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  63 பேர் பங்கேற்றனர். இதன் மூலம் கட்சியில் மீண்டும் தனது பலத்தை  எடப்பாடி பழனிசாமி நிரூபித்துள்ளார். 

16வது குடியரசு தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு அதிமுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்குவதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 கடந்த ஜூலை 11ந்தேதி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிசாமி கூட்டிய முதல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இது என்பதால், அதிகம் கவனம் பெற்றது. இரட்டை இலை சின்னத்தில் வென்ற 66 எம்.எல்.ஏக்களில் 63 எம்.எல்.ஏக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூன்று பேர் மட்டுமே கலந்துகொள்ளவில்லை. இதன் மூலம் அதிமுக எம்.எல்.ஏக்களிடையே தமக்கு இருக்கும் ஆதரவை எடப்பாடி பழனிசாமி தக்கவைத்துக்கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவின் முகவர்களாக உள்ள பாஜக எம்.எல்.ஏக்கள், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு வந்திருந்து நாளைய தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்களிடம் விளக்கினர். அவர்கள் சென்ற பிறகு,  சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் யாரை அமர்த்துவது என்பது உள்ளிட்டவை குறித்தும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பதவியை தற்போது வகித்து வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்குவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இ,தற்கிடையே  ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரை சந்தித்து நாளைய தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு வாக்களிப்பது குறித்து  வானதி ஸ்ரீனிவாசன் விளக்கியதாகக் கூறப்படுகிறது. இதே போல ஓ.பன்னீர்செல்வத்தை தொலை பேசியில் தொடர்புக்கு கொண்டும் வானதி ஸ்ரீனிவாசன் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக  சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தன்கருக்கு ஆதரவு அளிக்கும்படி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம்மிடம் பேசியதாகத் தெரிவித்துள்ளார். அந்த கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தாம் ஆலாசனை நடத்தியதன் அடிப்படையில், ஜெதீப் தன்கருக்கு அதிமுக ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வைகை அணை திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Halley Karthik

இன்று முதல் தேநீர் கடைகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி!

Vandhana

பழங்குடியின சிறுவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து சென்ற ஆட்சியர்!

G SaravanaKumar