தனித்துவமான சண்டைக்காட்சிகள், மிரட்டும் நடிப்பு என தனக்கே உரித்தான பாணியில் இன்று வரை பல்வேறு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் ராஜ்கிரண். நல்லி எலும்பை கையில் எடுக்கும் போதே நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் இவராகத்தான் இருக்கும். திரைத்துறையில் தயாரிப்பாளராக அறிமுகமான ராஜ்கிரண், கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் நடித்ததன் மூலம் பலரின் மனம் கவர்ந்த நாயகனாக, தமிழ் மக்களின் எதார்த்தமான ஹீரோவாக இன்றும் பார்க்கப்படுகிறார்.
ராமநாதபுரத்தில் 1949-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி பிறந்தவர். சிறுவயதிலேயே படிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட ராஜ்கிரண், நன்றாக படித்து ஐபிஎஸ் தேர்வை எழுதி மிகப்பெரிய காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்பதுதான் அவரது நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது.
இருப்பினும் காலம் யாருக்கு என்ன என்று முடிவு செய்து வைத்திருக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதுபோலத்தான் ராஜ்கிரணின் வாழ்க்கையும் அமைந்தது. வீட்டு சூழலால் 16 வயதிலேயே வேலை தேடி சென்னைக்கு வந்தவர், எங்கெங்கோ வேலை தேடி அழைந்து பிறகு, சினிமா விநியோக கம்பெனி ஒன்றில் பணியில் சேர்ந்தார். தினக்கூலியாக வேலைக்கு சேர்ந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக திறமையான சினிமா விநியோகஸ்தராக அவதாரம் எடுத்தார்.
காதர் என்ற இயற்பெயருடைய ராஜ்கிரண், தனது பெயரிலேயே சொந்தமாக திரைப்பட விநியோக நிறுவனத்தை தொடங்கி, இவர் தொட்டாலே எல்லாம் வெற்றிதான் என்று திரையுலகமே பேசும் அளவுக்கு புகழ்பெற தொடங்கினார். எந்த வேகத்தில் திரைப்பட விநியோகம் என்ற வெற்றி ஏணிப்படிக்கட்டுகளில் ஏறினாரோ அதே வேகத்தில், அந்த ஏணிப்படிகளில் இருந்து சில சறுக்கல்களையும் அவர் சந்தித்தார்.
இருப்பினும் தனது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் வாழ்ந்தவரும் இல்லை, வீழ்ந்தவரும் இல்லை என்பது போல் மீண்டும் புது அவதாரம் எடுத்தார். இந்த முறை அவர் எடுத்த அவதாரம் தயாரிப்பாளர். ஏசியன் காதர் என்ற தனது விநியோக நிறுவனத்தை, ரெட் சன் ஆர்ட் என்ற தயாரிப்பு நிறுவனமாக மாற்றி முதல் முறையாக ஒரு படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்தார் ராஜ்கிரண். அந்த படம்தான் நடிகர் ராமராஜனை வைத்து எடுத்த என்ன பெத்த ராசா திரைப்படம்.
இதற்கு பிறகு, பலராலும் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட ஒரு கதையை தானே தயாரிக்கிறேன் என்று முடிவு செய்ததோடு, படத்தின் நாயகனாகவும் களமிறங்க முடிவு செய்தார் ராஜ்கிரண். அந்த படம்தான் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம். இந்த படத்தில் தான் தற்போது ஆல் ரவுண்டராக, குழந்தைகள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினரின் மனம் கவர்ந்த காமெடி கிங்காக வலம் வந்துகொண்டிருக்கும் வடிவேலுவையும் அறிமுக செய்து வைத்தார்.
இப்படத்தினை ஏதோ குருட்டு தனமான நம்பிக்கையில் எல்லாம் எடுத்து விடலாம் என்று ராஜ்கிரண் இறங்கவில்லை. இதன் வெற்றியை முன்பே கணித்துதான் இறங்கினார். நினைத்ததை சாதித்தும் காட்டினார். படமும் படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் தாண்டி ஒரு காட்சி இன்றுவரை மக்கள் மனதில் அப்படியே பதிந்து போனது. அதுதான் ராஜ்கிரண் படத்தில் நல்லி எலும்பு கடித்து சாப்பிடும் காட்சி. அன்று இந்த காட்சி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானோதோடு, கிராமங்களில் கோயில் திருவிழாக்களில் கிடா விருந்து வைத்தால் அங்கு நல்லி எலும்பை சாப்பிடும் போது, ராஜ்கிரண் மாதிரி சாப்பிட முயற்சித்தவர்கள் ஏராளம்.
இப்படி விநியோகஸ்தர், தயாரிப்பாளர், என்பதை தாண்டி ஒரு நடிகராக மக்கள் மனங்களில் முதல் படத்திலேயே நன்கு பதிந்து போனதால் தொடர்ந்து நடிகராக களம் இறங்கினார். அப்படி சில படங்களை சொந்தமாக தயாரித்து நடிக்கவும் செய்தார். இவரது படங்களில் பெரும்பாலும் சமூகம் சார்ந்த கருத்துக்கள் அதிகமாக இருக்கும். இவரது படங்களிலோ, நடிப்பிலோ செயற்கைதனம் இருக்காது. வாழ்கையோடு ஒன்றித்து நடிக்கும் ராஜ்கிரண் தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அவ்வாறே தேர்வு செய்தும் நடித்தார்.
அப்படி இவர் நடித்த படங்களில் நந்தா பெரியய்யாவையோ, சண்டக்கோழி படத்தின் பெரியவர் துரையையோ, பாண்டவர் பூமி தனசேகரனையோ இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. அதுபோலவே இவரது படங்களில் பாடல்களும் மிகவும் ரசிக்கக் கூடியவையாக இருக்கும். இளையராஜா மீதும், அவரது இசை மீதும் தீராத காதல் கொண்ட ராஜ்கிரண் அவரை தவிர வேறு இசையமைப்பாளர்களுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வழங்கியிருக்க மாட்டார். அந்த வகையில் இவர்களது கூட்டணியில் வெளிவந்த, பெண் மனசு ஆழமென்று, சோலப் பசுங்கிளியே, தாயென்னும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே, ஒரு சாந்தன காட்டுக்குள்ளே, அடி பூங்குயிலே, ராத்திரியில் பாடும் பாட்டு என்று இந்த பாடல்களை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.
அந்த அளவிற்கு 80, 90-களில் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக வளம் வந்த ராஜ்கிரண், திடீரென திரைத்துறையில் இருந்து காணாமல் போனார். அவர் எங்கு இருக்கிறார்… என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. பிறகு 2001- ல் மீண்டும் நந்தாவில் பயமூட்டிய பெரியவராக , பாண்டவர் பூமியில் சாதுவான மனிதராக திரைத்துறைக்குள் நுழைந்தவர், வரிசையாக சிம்புவுடன் கோவில், விஷாலுடன் சண்டக்கோழி , விஜய்யுடன் காவலன் , தனுஷுடன் வேங்கை, என அனைத்திலும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாக தோன்றினாலும், நடிப்பில் வித்தியாசம் காட்டி நடித்தார்.
இப்படியொரு பரிமாணத்தில் நடித்தவர்தான், விமலுடன் மஞ்சப்பை, சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் போன்ற படங்களில் நகைச்சுவை மிகுந்த கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிக்க வைத்தார். இப்படியொரு சூழ்நிலையில் தான் இவரது வித்யாசமான நடிப்பிற்கு மற்றுமொரு சான்றாக அமைந்ததுதான் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படம். இப்படத்தில் ராஜ்கிரண்தான் ஹீரோ என்றவுடன் பலருக்கும் ஆச்சர்யமாக தான் அந்த சமயம் தோன்றியது . மீண்டும் ராஜ்கிரணை பழைய ஹீரோவாக திரையில் பார்க்க எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர். காரணம் 60 வயதிலும் ஹீரோவாக, அதுவும் எந்த கஸ்தூரி ராஜாவின் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனாரோ, அதே கஸ்தூரி ராஜாவின், மகனான தனுஷ் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் எனும் போது ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
அந்த எதிர்ப்பரப்பை 60-வயதிலும் ராஜ்கிரண் தனது காதல் சொட்டும் நடிப்பால் ரசிக வைத்ததோடு , ஆக்ஷனிலும், சென்டிமென்டிலும் பட்டையை கிளப்பியிருந்தார். ராஜ்கிரண் சினிமாவிற்கு வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் வராமல்,சினிமாவை மிகவும் நேசித்து நடிக்க வந்தவர். அதனால் திரைத்துறையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இன்றும் பயணித்துக்கொண்டிருக்கும் ராஜ்கிரண் அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் இன்றைய இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளை பின்பற்ற வேண்டும் ..அவரை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
படங்களில் எப்போதும் முரட்டுத்தனமான ஆளாகவே நமக்கெல்லாம் பெரும்பாலும் பரிட்சயமான ராஜ்கிரண் நிஜ வாழ்க்கையில் மிகவும் சாதுவான, அன்பன மனிதர். என்றும் தனது கொள்கையில் இருந்து மாறாத எதார்த்த மனிதராக வாழ்ந்து வருபவர். காசு வருகிறதே என்பதற்காக விளம்பரங்களில் கூட நடிப்பதை விரும்பாமல் சில கொள்கைகளோடு இன்றும் பயணித்து வருபவர் .
என் ராசாவின் மனசிலே மாயாண்டியாக, பாண்டவர் பூமி தனசேகரனாக, சண்டக்கோழி ஊர் பெரியவர் துரையாக என்றென்றைக்கும் நம் மனம்கவர்ந்த ராஜ்கிரணுக்கு இன்று பிறந்தநாள்! இந்த மகா கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்…













