கமலுக்கு கிடைத்த லைஃப் டைம் செட்டில்மெண்ட்!

துடிக்குது புஜம்..ஜெயிப்பது நிஜம்.. தகிட தகதமிதா தீம் விக்ர..ம்!.. விக்ர..ம்..! என வெளியான நாள் முதலே விக்ரம் படத்தின் bgm-ஐ அசைப்போட்டபடியே அன்றாட பணிகளை செய்துவருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். “படம் ரிலீஸ் ஆகும்போது…

துடிக்குது புஜம்..ஜெயிப்பது நிஜம்.. தகிட தகதமிதா தீம் விக்ர..ம்!.. விக்ர..ம்..! என வெளியான நாள் முதலே விக்ரம் படத்தின் bgm-ஐ அசைப்போட்டபடியே அன்றாட பணிகளை செய்துவருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். “படம் ரிலீஸ் ஆகும்போது பதட்டமா பயமா இருக்குமா.. இல்ல இயல்பா இருப்பீங்களா?” என்று வெளியாவதற்கு முன்பே லோகேஷ் கனகராஜிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘நிச்சயமா பயமாதான் இருக்கும்.. என்னோட தோல்வி என்ன மட்டும் பாதிச்சா பரவால்லா என் கூட பயணிக்குற எல்லாரையுமே பாதிக்கும்ல!’ என்று வெளிப்படையாகவும் தன்னடக்கத்துடனும் பதிலளித்தார்.

படம் வெளியாக விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டுவரும் நிலையில் லோகேஷுடன் பயணித்த அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு கூட்டிச்சென்றுள்ளது விக்ரம் என்றே சொல்லலாம். படத்தில் குட்டி விக்ரமாக நடித்த தர்ஷன், ஏஜெண்ட் டீனா தொடங்கி உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என அனைவருமே சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு கார், உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனம், ரோலக்ஸாக நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என படக்குழுவினர் அனைவருக்கும் லைஃப் டைம் செட்டில்மெண்ட் போல் பரிசுகளை வாரி வழங்கிவருகிறார் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

படம் வெளியான 5வது நாளிலிருந்து தனித்தனியே பரிசுகளை வழங்கிவருவது ஒரு ப்ரொமோஷன் உத்தி எனவும் விமர்சிக்கப்படுகிறது. ‘மார்க்கெட்டிங் உத்தியாகவே இருக்கட்டுமே! இதுவரை எந்த தயாரிப்பாளர் இதுபோன்று உதவி இயக்குநர்களுக்கு வெற்றியிலும் வசூலிலும் பகிர்ந்தளித்திருக்கிறார்? உதவி இயக்குநர்களின் சினிமா பயணம் நிச்சயமற்றது! வாய்ப்பு கொடுப்பதே அவர்களுக்கான வாழ்க்கையை கொடுப்பதுதான் என்ற நிலையே பெரும்பாலும் நிகழ்கிறது. முறையான சம்பளம் கிடையாது, வேலைக்கான உத்தரவாதம் கிடையாது, மாடு போல் உழைத்தாலும் இயக்குநருக்கு கொடுக்கப்படும் மரியாதை அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. எனவே கமல்ஹாசனின் இந்த முன்னெடுப்பும் அதை ஒட்டிய விளம்பரங்களும் நிச்சயம் சினிமா வட்டாரத்தில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். படக்குழுவினருக்கு கமல்ஹாசன் கொடுக்கும் இந்த செட்டில்மெண்டை நாம் வரவேற்று கொண்டாட வேண்டும்’ என சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

உலக நாயகனுக்கே இந்த படம் ஒரு லைஃப் டைம் செட்டில்மெண்டாகத்தான் அமைந்துள்ளது எனலாம். கடைசியாக திரையரங்கில் கமல்ஹாசன் தீப்பொறி பறக்கவைத்தது விஸ்வரூபத்தில் தான். அதற்கடுத்து வந்த பாபநாசம் திரைப்படம் வெற்றிப் பட்டியலில் இணைந்தாலும் ரீமேக் என்பதால் அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் ஒரு மாஸ் விருந்து வைத்து வசூலை வாரிக்குவித்துள்ளார் கமல்.
ரஜினியை அருகில் வைத்துக்கொண்டே கமல் ஒரு மேடையில் பேசும் போது, ‘ கால்பந்தாட்டத்தை போல சினிமாவில் இரண்டு கோல் போஸ்டுகள் இருந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். என்னையும் சகோதரர் ரஜினியையும் வைத்து எங்கள் ரசிகர்கள் போடும் போட்டி இருதரப்பினரையும் சுவாரஸ்யப்படுத்தினால் மகிழ்ச்சிதானே’ என்பது போல் கூறியிருப்பார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சைலண்ட் மோடில் இருந்த ரஜினி-கமல் யுத்தம் மீண்டும் இணையத்தில் தொடங்கியிருப்பது கமலின் இந்த வெற்றியை மேலும் சுவாரஸ்யப்படுத்தியள்ளதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

70களின் இறுதியிலேயே தொடங்கிவிட்ட ரஜினி, கமல் யுத்தம் 80களில் அதன் உச்சம் தொட்டது. அப்போதிலிருந்தே அந்த யுத்தத்தில் பெரும்பாலும் ரஜினியின் கைகள் தான் ஓங்கியிருக்கும். ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வளம்வரும் பொறுப்பில் ரஜினி உச்சம்தொட இன்னொரு பக்கம் ரஜினிக்கு போட்டியாக கமர்ஷியல் படங்களை கொடுப்பதோடு, தான் ஆத்மார்த்தமாக நேசிக்கும் சினிமாவுக்காக பல புதிய சாகசங்களை செய்யும் பொறுப்பையும் சேர்த்து கையில் ஏந்திக்கொண்டு ஓடினார் கமல். அதில் சில வெற்றிகளையும் பல தோல்விகளையும் சந்தித்துள்ளார். இருப்பினும் அவரின் பெரும்பாலான படைப்புகள் காலங்கடந்தாவது கொண்டாடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக அடுத்தடுத்து பல படங்களில் ரஜினி நடித்து வந்திருந்தாலும் 90களில் அவர் அடைந்தது போலான மரண் மாஸ் வெற்றியை அவரால் அடைய முடியவில்லை. இன்னொரு பக்கம் கமலும் அரசியல் மற்றும் பிக்பாஸ் பக்கம் ஒதுங்கிவிட ஒரே ஒரு கோல் போஸ்டை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார் ரஜினி. இந்நிலையில் ரஜினியின் கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த அத்தனை படங்களை காட்டிலும் மாஸான கிளாஸான ஒரு வெற்றியை அள்ளி ருசித்திருக்கிறார் கமல். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்திற்கான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்துள்ள அதே வேளையில் முன்பே நடந்த ரஜினி, கமல் யுத்தம் அடுத்த அத்தியாயத்திற்கு நகர்ந்திருப்பது ரசிகர்களை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. படத்தின் வெற்றிகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், ‘நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு’ என்று உருகிவிட்டார்.

விக்ரம் படத்தில் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பதும் பெரிதும் வரவேற்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் வயதிற்கேற்ற பக்குவமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதன் மூலம் தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து வெற்றி முகம் தான். ரஜினியும் கபாலி, காலாவின் மூலம் அப்படியானதொரு இன்னிங்ஸை தொடங்கினார். திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை தர்பார், அண்ணாத்த என விவேக் பைக்கில் ஏழரை போடுவது போல தாருமாறாக ஒரு சுற்று சுற்றி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினி-கமலும் அமிதாப் பச்சன் போல வித்தியாசமான நேர்த்தியான வயதிற்கேற்றார் போலான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து பல படங்களில் பட்டையை கிளப்பி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விதவிதமாக விருந்து வைக்கவேண்டும் என கோரிவருகின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.